“கழிவற்ற நகர் – ஆரோக்கியமான வாழ்வு”
09-01-2026 | கொழும்பு
“கழிவற்ற நகர் – ஆரோக்கியமான வாழ்வு” எனும் தொனிப்பொருளில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சுகாதார அமைச்சுடன் இணைந்து ஜனவரி 7 ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இன்று இத்திட்டத்தின் இறுதிநாளாகும். மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தித்வா சூறாவளி மற்றும் அதன்பின்னர் தொடர்ச்சியாக நிலவிவரம் மழையுடனான வானிலை காரணமாக, 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4,931 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 6 நாட்களில் மாத்திரம் 1,598 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஆகையால் இந்நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் நோக்கில், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு மற்றும் கல்வி, பாதுகாப்பு ஆகிய அமைச்சுகளின் பங்களிப்புடன் இந்த மூன்றுநாள் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனவரி 7 ஆம் திகதி மத வழிபாட்டுத் தலங்களிலும், ஜனவரி 8 ஆம் திகதி பாடசாலை உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை சுத்தப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இறுதி நாளான இன்று (9) அரச மற்றும் தனியார் நிறுவனங்களை மையப்படுத்திய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இவ்வேலைத்திட்டம் நாட்டின் 341 உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் ரணதுங்கவின் பங்கேற்புடன் அம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் ரன்ன பகுதிகளில் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களைச் சுத்திகரித்தல், புகை விசிறல் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.