இலங்கையின் இன்றைய வானிலை அறிக்கை
📍 10-01-2026 | கொழும்பு
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் திருகோணமலையின் வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 100 km தொலைவில் இன்று காலை 4.00 மணியளவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது இன்று சுமார் 5.30 மணியளவில் நலிவடைந்து தாழ் அமுக்கமாக மாறுவதுடன் வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும். இன்று நன்பகல் அளவில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையாக இலங்கை கரையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் வட அரைப் பகுதியில் வானம் முகில் செறிந்து காணப்படும்.
வட மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .
வட மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 50 – 60 km வேகத்தில் அடிக்கடி மிகப் பலத்த காற்று வீசக் கூடும். சில வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 km ஆக அதிகரித்தும் காணப்படும். வடமேல் மாகாணத்திலும் அத்துடன் மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 – 45 km வேகத்தில் வட திசையில் இருந்து காற்று வீசும்.
கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 70 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக் காணப்படும்.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 – 3.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.