ஒரு சிலருக்கு மட்டும் இழப்பீடு வழங்குவதன் மூலம் செம்மணி பிரச்சினையை கை கழுவ முயற்சி – சோமரத்ன ராஜபக்ஷ குற்றம் சாட்டுகிறார்.
11-01-2025 | இலங்கை
ஒரு சிலருக்கு மட்டும் இழப்பீடு வழங்குவதன் மூலம் செம்மணி பிரச்சினையை கை கழுவ முயற்சி; காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் மரண தண்டனை கைதி சோமரத்ன ராஜபக்ஷ குற்றம் சாட்டுகிறார்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினர் செம்மணி படுகொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளாமல், காணாமல்போனோரில் சிலரது குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்கி, அவ்விவகாரத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, கைகழுவி விடுவதற்கே முயற்சிப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
அதனையடுத்து இதுபற்றிய மேலதிக விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்டு ஓகட்ஸ் மாதம் 18 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், மீண்டும் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தனர்.
இச்சந்திப்பு தொடர்பில் தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக, அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம எமக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்திய விடயங்கள் வருமாறு:
யாழ், செம்மணி மனிதப்படுகொலை தொடர்பான விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (9) எனது கணவரை வெலிக்கடை சிறைச்சாலையில் சந்தித்தனர்.
அதன்படி அவ்வலுவலகத்தின் தலைவரினால் எனது கணவரிடம் கூறப்பட்ட விடயங்களின் பிரகாரம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினர் செம்மணி படுகொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளாமல், காணாமல்போனோரில் சிலரது குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்கி, அவ்விவகாரத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, சர்வதேச சமூகத்தின் மத்தியில் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை சீரமைப்பதற்கே அவர்கள் முயற்சிக்கின்றனர் என்ற விடயம் தெளிவாகப் புலப்பட்டதாக எனது கணவர் கூறினார்.
செம்மணி மனிதப்புதைகுழி குறித்து 09.07.2025 அன்று எனது கணவர் சார்பில் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்ததுடன் 04.10.2025 அன்று இவ்விவகாரம் தொடர்பில் எனது கணவர் அவரது சட்டத்தரணி ஊடாக சத்தியக்கடதாசி ஒன்றையும் வழங்கியிருந்தார்.
அதில் அவர் 1996 ஆம் ஆண்டளவிலே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அரசாங்கம் இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, சொற்பளவானோருக்கு இழப்பீட்டை வழங்கி, இவ்விவகாரத்தைக் கைகழுவி விடுவதற்கே முயற்சிக்கின்றது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.