5 மூத்த பத்திரிகையாளர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது”!

இலங்கை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து 26ஆவது தடவையாக நடத்தவுள்ள ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா எதிர்வரும் 20ஆம் திகதி கல்கிஸை மவுன்ட்லெவெனியா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காக ஐந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளன. அவர்களின் விபரம் பின்வருமாறு…

உபாலி தென்னகோன்

உபாலி தென்னகோன் அவர்கள் 1970களில் பாடசாலை மாணவராக இருந்தபோதே பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், சிறப்பு அம்சங்கள் மற்றும் செய்திகளை வழங்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில், அவர் ‘தவச’ பத்திரிகைக்கு இம்புல்கொட நிருபராக பணியாற்றினார். 1976ஆம் ஆண்டளவில், அவர் ‘பிரியவி’ பத்திரிகையில் (அதே நிறுவனத்தால் வெளியிடப்பட்டது) ஒரு சுதந்திர ஊடகவியலாளராக பணியாற்றினார். அங்கு கட்டுரைகள் மற்றும் சிறப்பு அம்சங்களை வழங்குவதோடு, பல வழக்கமான பத்திகளையும் எழுதினார்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை இம்புல்கொட ராஜசிங்க மகா வித்தியாலயத்தில் பெற்றார். பின்னர், பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உயர் கல்வி மற்றும் ஊடகவியல் தொடர்பான படிப்புகளைத் தொடரும் வாய்ப்பை அவர் பெற்றார்.

பின்னர், 1977ஆம் ஆண்டில், அவர் லேக் ஹவுஸில் உள்ள ‘தினமின’ பத்திரிகையில் சுதந்திர ஊடகவியலாளராக சேர்ந்தார். சில மாதங்களில், பத்திரிகைத் துறையில் செய்திப்பிரிவு ஊடகவியலாளராக சேர்ந்தார். அங்கு பணியாற்றிய காலத்தில், ‘சிலுமின’ மற்றும் ‘தருணி’ உட்பட பல லேக் ஹவுஸ் வெளியீடுகளில் பணியாற்றும் வாய்ப்பை அவர் பெற்றார்.

செப்டம்பர் 1981இல் உபாலி நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட்டின் ‘திவயின’ பத்திரிகையில் அதன் நிறுவுனர் குழு உறுப்பினராக சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பின்னர், அவர் மாகாண செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். செய்தி ஆசிரியர், துணை ஆசிரியர் மற்றும் இணை ஆசிரியர் போன்ற பல்வேறு பதவிகளில் பணியாற்றிய பின்னர், அவர் 1994இல் ‘திவயின’வின் பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டார்.

இதன் விளைவாக, 2006இல் ‘ரிவிர’ மற்றும் ‘தி நேஷன்’ பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. ‘ரிவிர’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஜனவரி 23, 2009 காலை வேலைக்குச் செல்லும் வழியில் அவர் குண்டர்களால் மிருகத்தனமாக தாக்கப்பட்டார்.

அவர் தனது பத்திரிகை பத்திகளின் தொகுப்பைக் கொண்ட ‘பத்தர பஹக திருலிபி ஹதக்’ (ஐந்து பத்திரிகைகளில் ஏழு பத்திகள்) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும், ‘புவத்பத் களவ’ (பத்திரிகை) என்ற மற்றொரு புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.

புஷ்பா இலங்கந்திலேக்க

புஷ்பா இலங்கந்திலேக்க அவர்கள் இலங்கையின் சிரேஷ்ட தொழில்முறை ஊடகவியலாளராகத் திகழ்ந்து, 45 ஆண்டுகளுக்கும் மேலான ஊடகத் துறை அனுபவத்தை கொண்டவராவார். இந்த நீண்டகாலப் பணிப்பயணத்தில், நாட்டின் முன்னணி பத்திரிகை நிறுவனங்களில் பல முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

1981ஆம் ஆண்டு, லேக் ஹவுஸ் என அறியப்படும் Associated Newspapers of Ceylon Limited நிறுவனத்தில் சுயாதீன எழுத்தாளராக தனது ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார். “ஜனதா”, “யோவுன் ஜனதா”, “நவயுகயா” போன்ற வெளியீடுகளில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில், எட்வின் ஆரியதாச, தர்மசிரி கமகே, சோம வீரசேன நாயக்க ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் வழிகாட்டுதலை அவர் பெற்றார்.

1982ஆம் ஆண்டு, உபாலி பத்திரிகை நிறுவனத்தால் ‘திவயின” பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதையொட்டி, “நவலிய” மகளிர் பத்திரிகையில் அவர் இணைந்தார். 2010ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகள் உபாலி பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றிய அவர், “நவலிய”, “பிந்து” (குழந்தைகள்), “திவயின (தினசரி)”, “திவயின (ஞாயிறு)” மற்றும் “வத்மன” தேசிய பத்திரிகை உள்ளிட்ட பல வெளியீடுகளில் துணை ஆசிரியர், உதவி ஆசிரியர், துணை பிரதம ஆசிரியர் மற்றும் ஆசிரியர் எனப் பல பதவிகளை வகித்தார். குறிப்பாக “வத்மன” இதழின் பிரதம ஆசிரியராக அவர் ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கதாகும்.

2011 முதல் ஐந்து ஆண்டுகள் “ரிவிர” தினசரி பத்திரிகையின் சிறப்புக் கட்டுரைகள் ஆசிரியராக பணியாற்றினார். 2017 முதல் மேலும் ஐந்து ஆண்டுகள் “லங்காதீப (ஞாயிறு)” பத்திரிகையில் துணை ஆசிரியரும் சிறப்புக்கட்டுரைகள் எழுத்தாளருமானார். அதன் பின்னர், 2024 முதல் ஒன்றரை ஆண்டுகள் “மொணரா (ஞாயிறு)” பத்திரிகையில் சிறப்புக் கட்டுரைகள் எழுத்தாளராக அவர் பங்களித்து வருகிறார்.

1987ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகத் துறையில் டிப்ளோமா பெற்ற அவர், 2006 ஆம் ஆண்டு இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகாமை (ICTA) மூலம் தகவல் தொழில்நுட்ப சான்றிதழையும் பெற்றார்.

மேலும்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்த ஸ்ரீ ஜினரதன தொழில் பயிற்சி கல்வி நிறுவனத்தில் 1980ஆம் ஆண்டின் முதல் ஊடக டிப்ளோமா பயிற்சிக் குழுவின் சான்றிதழ் பெற்றவருமாவார்.

1989ஆம் ஆண்டு தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற தென் ஆசிய பெண்கள் திறன் பயிற்சி நிகழ்ச்சியில் பார்வையாளர் பிரதிநிதியாக பங்கேற்றார். 2003ஆம் ஆண்டு இந்திய உழைக்கும் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் (IFWJ) மாநாட்டிலும் கலந்துகொண்டார். 2014ஆம் ஆண்டு நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெற்ற ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகச் சட்டங்கள் மாநாட்டில் தனது துறையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கவிஞரும் பாடலாசிரியருமான புஷ்பா இலங்கந்திலேக்கே நாவல்கள், இளைஞர் மற்றும் குழந்தைகள் இலக்கியங்கள், வாழ்க்கை வரலாறுகள் ஆகியவற்றின் ஆசிரியராகவும் திகழ்கிறார். வானொலி, தொலைக்காட்சி மற்றும் குறும்படங்களுக்கான திரைக்கதை எழுத்தாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை அவர் 12 இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். அவரது குழந்தைகள் பாடல் தொகுப்பான ‘ஒலுவிலேமாலுவோ” 2021ஆம் ஆண்டு அரச இலக்கிய விருதுகளில் சிறந்த அசல் குழந்தைகள் படைப்புக்கான பரிந்துரையை பெற்றது.

இரா.அ.இராமன்

கண்டி பூரணவத்தை பகுதியில் 1942ஆம் ஆண்டு பிறந்த கண்டி இரா.அ.இராமன், இலங்கைத் தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுத்துறைகளில் முக்கிய பங்களிப்பு செய்துள்ள ஒரு மதிப்புமிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் மற்றும் கலாசார செயற்பாட்டாளர் ஆவார்.

குறிஞ்சித்தேனி மற்றும் பூரணவத்தை காகுத்தன் என்ற புனைப்பெயர்களில் அறியப்படும் அவர், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பாக மலையகப் பகுதிகளில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்காக அர்ப்பணித்துப் பணியாற்றி வருகிறார்.

அவர் தினக்குரல் பத்திரிகையின் கண்டிக் கிளை முகாமையாளராக 18 ஆண்டுகள் கடமையாற்றி, 2018 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப் பின்னரும் ஊடக மற்றும் இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். தற்பொழுது மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவராகச் செயல்படும் அவர், முன்னதாக கண்டித் தமிழ் சங்கத்தின் செயலாளர் மற்றும் கைலாசபதி ஆய்வு மையத்தின் செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

இலக்கிய உலகில் “இவர்கள்” மற்றும் “இது கதையல்ல நிஜம்” ஆகிய நூல்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் அம்மா, பூரணம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், கண்டி இலக்கியச் செய்திமடல், இனி போன்ற இலக்கிய செய்திப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றி பல எழுத்தாளர்களுக்கு மேடையமைத்துள்ளார்.

அவரது இலக்கியச் சேவைகளுக்காக கலாபூஷணம், கலைச்சுடர், கலைமாமணி உள்ளிட்ட பல மாகாண மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பு நெலும் பொக்குன மண்டபத்தில் நடைபெற்ற தேசிய விழாவில் கௌரவிக்கப்பட்ட 100 கலைஞர்களில் ஒருவராகவும் இவர் இடம்பெற்றார்.

அவரது தலைமையில் இலங்கையின் பல பகுதிகளையும் வெளிநாடுகளையும் சேர்ந்த எழுத்தாளர்களின் 150க்கும் மேற்பட்ட நூல்கள் கண்டியில் வெளியிடப்பட்டுள்ளன.

சாதிக் தௌஃபீக்

சாதிக் தௌஃபீக் இலங்கையின் விளையாட்டு ஊடகவியலாளரும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட சிரேஷ்ட கிரிக்கெட் எழுத்தாளருமாவார். 1976ஆம் ஆண்டில் தனது விளையாட்டு ஊடகவியல் பயணத்தை ஆரம்பித்த அவர், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விளையாட்டு ஊடகவியலில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார்.

1982 ஆம் ஆண்டு பி. சராஓவலில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியையும், 1984 ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற இலங்கையின் முதல் வெளிநாட்டு டெஸ்ட் போட்டியையும் அவர் அறிக்கையிட்டார். அதன் பின்னர் இலங்கையில் நடைபெற்ற ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் தொடர்ந்து அறிக்கையிட்ட ஒரே விளையாட்டு ஊடகவியலாளர் இவரே. மொத்தமாக 200க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளை அறிக்கை செய்துள்ள இலங்கையின் ஒரே விளையாட்டு ஊடகவியலாளர் என்ற சிறப்பும் அவருக்கே உரியது. மேலும், அவரது முதல் வெளிநாட்டு டெஸ்ட் போட்டி 1984 லார்ட்ஸில் நடைபெற்றது. அவரது 100-வது டெஸ்ட் போட்டியும் 2006ஆம் ஆண்டு லார்ட்ஸிலேயே நடைபெற்றது. 200-வது டெஸ்ட் போட்டியும் 2024 ஆம் ஆண்டு லார்ட்ஸிலேயே நடைபெற்றது என்பது ஒரு அபூர்வ சாதனையாகும். 1987 முதல் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து அறிக்கையிட்டு வருகிறார்.

சாதிக் தௌஃபீக் நீண்டகாலமாக ESPNCricinfoக்காக எழுதிவந்ததுடன், லண்டன் டெய்லி டெலிகிராப், லண்டன் டைம்ஸ் மற்றும் மான்செஸ்டர் கார்டியன் போன்ற பத்திரிகைகளுக்காகவும் இலங்கை சர்வதேச கிரிக்கெட் பற்றி எழுதியுள்ளார். 1995 ஆம் ஆண்டு முதல் Wisden Cricketers’ Almanackஇன் இலங்கை ஊடகவியலாளராக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மேலும், Reuters மற்றும் AFP ஆகிய சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு பகுதி நேர கிரிக்கெட் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1976 முதல் 2006 வரை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் டெய்லி நியூஸ் பத்திரிகையில் விளையாட்டுஎழுத்தாளராகவும் பின்னர் விளையாட்டு பத்திரிகையாசிரியராகவும் பணியாற்றிய அவர், 2015 முதல் 2020 வரை குழு விளையாட்டு ஆசிரியராக மீண்டும் சேவை செய்தார். 2006 முதல் 2015 வரை தி சண்டே நேஷன் பத்திரிகையில் துணை ஆசிரியர் (விளையாட்டு) பதவியையும் வகித்தார். தற்போது டெய்லி எஃப்.டி. (Daily Financial Times) பத்திரிகையில் விளையாட்டு எழுத்தாளராக பணியாற்றி வருகிறார்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு வழங்கிய சிறப்பான சேவைகளுக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அவருக்கு தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும்,பத்திரிகையாசிரியர் சங்கம் (Editors’ Guild of Sri Lanka) நடத்தும் Sports Journalism of the Year விருதை 2006 மற்றும் 2007 ஆண்டுகளில் இருமுறை பெற்றுள்ளார்.

அவரது மறைந்த தந்தை எம்.எம்.தௌஃபீக் அவர்களும் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய சிரேஷ்ட பத்திரிகையாளராக இருந்து, சிலோன் ஒப்சர்வர் பத்திரிகையின் விளையாட்டு ஆசிரியராகவும், டெய்லி நியூஸ் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் சேவை செய்தவர் ஆவார்.

அலெக்ஸாண்டர் பாலசூரிய

அலெக்ஸாண்டர் பாலசூரிய இலங்கையின் ஊடகத் துறையில் பல தசாப்தங்களாக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள சிறப்புமிக்க புகைப்பட ஊடகவியலாளராகத் திகழ்கிறார். அவர் 1977 ஆம் ஆண்டு ‘தவச” பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக தனது தொழில்முறை ஊடகப் பயணத்தை ஆரம்பித்தார்.

1950 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி திம்பிரிகஸ்யாயாவில் பிறந்த அவர், கொழும்பு இசிபதனக் கல்லூரியில் கல்வி பயின்றார். பள்ளிக் காலத்திலேயே புகைப்படக் கலையில் ஆர்வம் வளர்த்துக் கொண்டஅவர், 1970 மற்றும் 1971 ஆண்டுகளில் பிறந்தநாள் விழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகளைப் புகைப்படமாகப் பதிவு செய்வதில் ஈடுபட்டார்.

1977 ஆம் ஆண்டு ‘தவச” பத்திரிகையில் சேர்ந்த பின்னர், சுமார் மூன்று மாதங்கள் அங்கு பணியாற்றினார். அதன் பின்னர் அந்த பத்திரிகையிலிருந்து விலகி, மீண்டும் திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளை மையமாகக் கொண்டு சுயாதீன புகைப்படக் கலைஞராக செயல்பட்டார்.

அந்தகாலகட்டத்தில் அவர் ‘அலெக்ஸ் போட்டோ” என்ற பெயரில் ஒரு புகைப்பட ஸ்டூடியோவையும் நடத்தினார். மேலும், ‘டார்க் ஷரூம்” என்ற புகைப்பட அச்சிடும் நிறுவனத்தையும் இயக்கினார். அங்கு அந்த காலத்தின் பல முக்கியமான செய்தித்துறை மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களின் அச்சிடல் பணிகளை அவர் மேற்கொண்டார்.

1985 ஆம் ஆண்டின் இறுதியில், அலெக்ஸாண்டர் பாலசூரிய மீண்டும் ஊடகவியல் துறையில் இணைந்து விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். தருணயா, சிரிகதா, இரிதாலங்காதீப, சதிமடலங்காதீப (பின்னர் தினபதா லங்காதீப என மாற்றம் பெற்றது) உள்ளிட்ட பல பத்திரிகைகளுக்காக அவர் சேவை புரிந்தார். 2019ஆம் ஆண்டில் அவர் விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்றார்.

புகைப்பட ஊடகவியலில் அவர் செய்த சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், கிவந்த ஆர்தசாத் ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழாவில் அவர் சிறந்த புகைப்படக் கலைஞர் விருதை பெற்றார்.

Leave a Reply