இலங்கை மருத்துவர்கள் 23’ம் தேதி முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

இலங்கை

எதிர்வரும் 23’ம் திகதி முதல் விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட அனைத்து வைத்தியர்களும் ஒன்றிணைந்து நாடு தழுவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை கட்டமைப்பினுள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி, ஒரு சில நடவடிக்கைகளிலிருந்து வைத்தியர்கள் விலகியிருக்கும் தொழிற்சங்கப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், இதன் இரண்டாம் கட்டமாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அரசாங்கம் உணரும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த உள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, அக்கறைப்பற்று வைத்தியசாலையில் நிலவிவரும் நிர்வாகச் சீர்கேடு காரணமாக, வைத்தியர்களும் வைத்திய ஊழியர்களும் பணிபுரிவதற்கு உகந்த பாதுகாப்பான சூழல் இல்லை எனவும், அவ்வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் குழுக்களுடன் இணைந்து ஊழியர்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், கடந்த 13 ஆம் திகதி முதல் கிழக்கு மாகாணம் முழுவதும் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்ததுடன், தைப்பொங்கல் தினத்தையொட்டி இடைநிறுத்தப்பட்ட வேலைநிறுத்தம் நேற்றைய தினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் அன்பாஸ் பாரூக் தெரிவிக்கையில்,

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாமை மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிருப்தியடைந்துள்ளது. விசேட வைத்திய சேவைப் பிரிவு, போக்குவரத்து மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்கள் நீண்டகாலமாகத் தேங்கிக் கிடக்கின்றன.

சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட இணக்கப்பாடு ஜனவரி 5 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், எதிர்வரும் ஜனவரி 23 முதல் நாடு தழுவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துத் தீர்வு வழங்கத் தவறுமாயின், வைத்தியர்கள் வெளியேறுவதையும் இலவசச் சுகாதாரச் சேவை வீழ்ச்சியடைவதையும் தடுக்க முடியாது என்றார்.

Leave a Reply