தித்வா வீட்டுவசதி திட்டத்தை இந்தியாவிடம் விட்டுவிடாதீர்கள் – மனோ கணேசன்

இலங்கை

இலங்கை தேசிய இடர் நிவா‌ரண அமைச்சின் கீழ், நாட்டின் ஏனைய பெரும்பான்மை மக்களுக்கு 50 இலட்ச ரூபா செலவில், வீடு கட்டிக்கொடுக்கப்படும் தேசிய திட்டத்தின் கீழ் தான் மலையக மக்களின் தித்வா வீடமைப்பு திட்டமும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சாதாரண காலத்தில், இந்திய அரசு எமக்கு வீடு கட்டி தருவது சரியானது. ஆனால் தித்வா வீடமைப்பு திட்டத்தையும் இந்தியாவிடம் தள்ளி விட வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் இலங்கை பிரஜைகள். இந்திய பிரஜைகள் அல்ல. இது பற்றி இந்திய உயர்ஸ்தானிகருக்கும் நான் அறிவித்துள்ளேன். இதற்கு, இந்திய தூதரகம் பதிலும் அளித்துள்ளது. ‘தித்வா வீட்டு திட்டம் வேறு, இந்திய வீடமைப்பு திட்டம் வேறு’ என்பதை இலங்கை அரசுக்கு தெரிவித்து விட்டதாக, இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு கவுன்சிலர் மைத்திரி குல்கர்னி என்னிடம் தெரிவித்தார்.

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தை இந்திய வீடமைப்பு திட்டத்துக்குள் உள்வாங்குவதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு இடம்பெற்றால் அது தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற எப்பார்தைட் போன்ற இன ஒதுக்கலாகும் என்பதை அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் கடுமையாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்.

அநுதாரபுரம், குருணாகல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியும் வழங்கி, வீடமைப்பிற்காக 50 இலட்சம் ரூபா பணமும் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது சிறந்த திட்டமாகும். ஆனால் இந்த கவனிப்பும் உபசரிப்பும் மலையக மக்களுக்கு இல்லை. மலையக மக்களுக்கு காணியுமில்லை, வீடுமில்லை என்று அரசாங்கம் கூறுகின்றது. இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் தான் மலையக மக்களுக்கான வீடமைப்பு திட்டமும் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது.

தேசிய இடர் நிவாரணத்தின் கீழ் 50 இலட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் கீழ் இது உள்வாங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் நியாயமற்ற செயலாகும். இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ; ஜாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மலையக மக்கள் இந்திய பிரஜைகள் அல்ல, அவர்கள் இந்திய வம்சாவளிகளாக இருக்கலாம். ஆனால் அவர்கள் இலங்கை பிரஜைகள் அல்ல என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.

இந்த இன ஒதுக்கல் திட்டத்துக்கு துணை போய்விட வேண்டாம் என இந்திய உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இலங்கை அரசாங்கத்தின் சதித்திட்டங்களுக்கு இந்தியா துணை போய்விடக் கூடாது. பெருந்தோட்ட வீடமைப்பு திட்டத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கு தற்போது இலங்கை ரூபாவில் 27 இலட்சம் மதிப்பீடு செய்துள்ளதாகவும், அதனை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு கவுன்சிலர் தெரிவித்தார்.

இந்திய உதவி பெருந்தோட்ட வீடமைப்பு திட்ட ஒப்பந்தத்தின் படி அது, இலங்கை அரசாங்கத்தால் தற்போது முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார். மலையக மக்கள் இந்திய பிரஜைகள் அல்ல. இவர்கள் இலங்கையர்கள். எனவே ஏனைய பிரஜைகளைப் போன்று அரசாங்கத்தின் நிவாரண வீடமைப்பு திட்டத்தின் கீழ் மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டும்.

வீடுகளை நிர்மாணிப்பதற்கு போதுமான காணிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. பெருந்தோட்டக் காணிகள் கம்பனிகளுக்கு சொந்தமானவையல்ல. அவை நீண்ட நாள் குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன. எனவே அவை அரசாங்கத்துக்கு சொந்தமானவையாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியல் மனோதிடம் இருக்குமானால் அவரை அதனை செய்ய முடியும். இதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தெளிவான நிலைப்பாடு என்பதை கூட்டணியின் தலைவர் என்ற ரீதியில் நான் தெளிவாகக் கூறிக் கொள்கின்றேன் என்றார்.

Leave a Reply