”இந்திய மத்திய பட்ஜெட்டில் உற்பத்தி திறன், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம்,” – இந்திய மத்திய நிதியமைச்சர்
புதுடில்லி, இந்திய – 01 பிப்ரவரி 2026
” மத்திய பட்ஜெட்டில் உற்பத்தி திறன், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது,” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பார்லிமென்டில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், வேகத்தில் வளர்ச்சி பெற செய்ய, பாதை அமைத்து பொருளாதாரத்திற்கு உந்துதல் அளிக்கிறோம். கட்டமைப்பு சீர்திருத்தங்களுடன் கூடிய அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடரும். உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்குவதை உறுதி செய்ய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
21ம் நூற்றாண்டில் முற்றிலும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. எனவே, பொது மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்டுவரப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். ஒரு நகரத்துக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், இரண்டாம்நிலை, மூன்றாம்நிலைநகரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
செமி கண்டக்டர் திட்டத்தில் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இது அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விஷயங்களை மேம்படுத்தும். 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான த மினனணு பாகங்கள் உற்பத்தித் திட்டம், மின்னணு துறையில் இந்தியா தற்சார்புநிலையை அடைய ஊக்கம் அளிக்கும். இந்தியா தனது சொந்தத் தேவைகளைத் தனது பொருட்களால் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அரிய வகை தனிமங்களை வழித்தடங்களை அமைப்பதையும் அறிவித்துள்ளோம். இந்த கனிமங்களை கண்டறிந்து அவற்றை நமக்கு கிடைக்கச் செய்யும்போது ,அரிய வகை தாதுக்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை குறையும்.
இவை ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அமைய உள்ளன. இவை மிகவும் முக்கியமான முன்னேற்றங்கள். மேலும், இவை இந்தியப் பொருளாதாரத்தில் பலதரப்பட்ட நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தப் போகின்றன. காந்தங்கள் மற்றும் அரிய மண் தனிமங்களுக்கான நமது சார்புநிலை குறைக்கப்படும்.
இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நோய்களின் பட்டியலில் மேலும் ஏழு அரிய வகை நோய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நேரடி மற்றும் மறைமுக வரி தொடர்பான மேலும் பல முன்மொழிவுகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.