ஆறாம் வகுப்பின் முதல் செமஸ்டருக்கான பாடப்புத்தகங்கள் அகற்றப்படவில்லை அல்லது நிராகரிக்கப்படவில்லை. – இலங்கை பிரதமர்

கொழும்பு, இலங்கை – 04 பிப்ரவரி 2026

ஆறாம் தர மாணவர்கள் வீதியில் இறங்குவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை ஏனெனில் அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. இவர்தான் (நளின் பண்டார) வீதிக்கு இறங்க வெட்கப்பட வேண்டும். மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை இவர்கள் தான் ஏற்படுத்தினார்கள். இவர்களுக்கு தான் இன்று வீதிக்கு இறங்க முடியாத நிலை உள்ளது. ஆறாம் தரத்துக்கான முதலாம் தவணைக்கான பாடப்புத்தகங்கள் நீக்கவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை என கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03-02-2026) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

6 ஆம் தரத்தின் முதலாம் தவணைக்கான பாடத்தொகுதிகளே அச்சிடப்பட்டுள்ளன. அவற்றுள் எதனையும் நாம் நிராகரிக்கவோ அல்லது நீக்கவோ இல்லை. 6 ஆம் தரத்திற்கான திட்டத்தை 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த முன்மொழிந்துள்ளோம்.

2027 இல் அதனை நடைமுறைப்படுத்தும்போது அவற்றைப் பயன்படுத்துவதற்கே நாம் திட்டமிட்டுள்ளோம். அதனை தற்போது நீக்கவோ அல்லது நஷ்டம் ஏற்படும் வகையிலான எந்தவொரு தீர்மானத்தையோ நாம் எடுக்கவில்லை.

தற்போது 6 ஆம் தரத்திற்கான பாடப்புத்தகங்களை நாம் ஏற்கனவே அச்சிட்டுள்ளோம். தற்போது களஞ்சியசாலைகளில் உள்ளவற்றை விநியோகிக்க ஆரம்பித்துள்ளோம்.

பெப்ரவரி மாத நடுப்பகுதிக்குள் அனைத்துப் பாடப்புத்தகங்களையும் விநியோகிக்கத் தயாராக உள்ளோம். ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை ஆரம்பித்துள்ளனர். பழைய பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளதால் ஆசிரியர்களால் அவற்றைக் கற்பிக்க முடியும்.

ஆறாம் தர மாணவர்கள் வீதியில் இறங்குவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை ஏனெனில் அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. இவர்தான் (நளின் பண்டார) வீதிக்கு இறங்க வெட்கப்பட வேண்டும்.

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை இவர்கள் தான் ஏற்படுத்தினார்கள். இவர்களுக்கு தான் இன்று வீதிக்கு இறங்க முடியாத நிலை உள்ளது என்றார்.

Leave a Reply