ஏர் இந்தியா விமானத்தில் மற்றொரு சிக்கல்; போயிங் 787 விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

புதுடில்லி

‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின், ‘போயிங் 787 ட்ரீம்லைனர்’ ரக விமானத்தில், இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த வகை விமானங்களை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு, கடந்த ஆண்டு ஜூன் 12ல் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது.

இதில், 260 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்துக்கு, எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் கோளாறு முக்கிய காரணமாக கண்டறியப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

இதேபோன்ற சம்பவம், ஏர் இந்தியா நிறுவனத்தின் அதே ரக விமானத்தில் மீண்டும் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், கர்நாடகாவின் பெங்களூரில் நேற்று முன்தினம் தரையிறங்கியது.

இதைத்தொடர்ந்து, மீண்டும் அந்த விமானத்தை இயக்க முயன்ற விமானி ஒருவர், அதன் இடதுபக்க எரிபொருள் சுவிட்ச், ‘ரன்’ நிலையில் நிற்காமல், ‘கட் – ஆப்’ நிலைக்கு சென்றதை கவனித்தார்.

இது, விமானத்தின் இன்ஜினுக்கு எரிபொருள் செல்வதை தடுக்கும் என்பதால், உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விமானத்தை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன தொழில்நுட்பக்குழு மற்றும் டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகளும் அந்த விமானத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தன் வசம் உள்ள போயிங் 787 ட்ரீம்லைனர் ரக அனைத்து விமானங்களில் உள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியாவின் விமான இயக்கப்பிரிவின் மூத்த துணைத்தலைவர் மணீஷ் உப்பல் வெளியிட்ட அறிக்கையில், ‘போயிங் 787 ரக விமானங்களில் உள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை விமான குழுமம் முழுதும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தை முன்னுரிமை அடிப்படையில் மதிப்பீடு செய்ய, ஏர் இந்தியாவின் பொறியாளர் குழு, போயிங் நிறுவனத்திடம் கொண்டு சென்றுள்ளது. இவ்வகை விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சின் இயல்பான செயல்பாடுகளை முன்னெச்சரிக்கையுடன் மறு ஆய்வு செய்ய துவங்கியுள்ளோம்’ என, குறிப்பிட்டுள்ளார்.

தற்போது,​ஏர் இந்தியாவிடம் 33 போயிங் 787 விமானங்கள் உள்ளன. இவ்வகை விமானங்களை இயக்கும் முன், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உடனே புகார் அளிக்கும்படி தன் விமானிகளுக்கு ஏர் இந்தியா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply