வெள்ளவத்தையில் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ‘ஐஸ் போதைப் பொருட்களுடன்’ இருவர் கைது

வெள்ளவத்தை

வெள்ளவத்தை பகுதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும்1.5 இலட்சம் ரூபா ரொக்கப் பணத்துடன் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் கார் மற்றும் முச்சக்கரவண்டி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டபிளியு. ஏ. சில்வா மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே மேற்படி சந்தேகநபர்கள் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான நபர்களிடமிருந்து ஒரு கிலோ 9 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முச்சக்கரவண்டியில் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் ஊடாக, தற்போது விளக்கமறியலில் உள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்லில் ஈடுபடும் நபரான எல்லேகொட மத்துமகெ தினேஷ் தரங்க எனும் ‘தரங்க’ என்பவரின் பிரதான சகா என தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கார் ஒன்றையும் அதிகாரிகள் பெறுப்பேற்றுள்ளனர். மேலும் கைதான சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போரதைப்பொருள், வாககனங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெள்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply