வெளிநாடுகளில் கருவின் பாலினத்தை அறிந்து வெளியே தெரிவிக்கும் இந்தியர்கள் மீது நடவடிக்கை

சென்னை

சென்னை தலைமைச் செயலகத்தில், கருவின் பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட, மாநில மேற்பார்வை குழு கூட்டம் நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் துறை செயலர் செந்தில்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில், கருவுறுதலுக்கு முன் பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தின்படி பதிவுபெற்று, 1,727 அரசு, 7,343 தனியார் என, 9,070 ஸ்கேன் நிலையங்கள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும், புதிதாக ஸ்கேன் நிலையங்கள் அமைக்க, 1,747 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,608 மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இம்மையங்கள் தொடர்பாக சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளுக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை செய்து, கருவின் பாலினத்தை வெளியில் தெரிவிக்கும் இந்தியர்கள் மீது, சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க, சட்டம் இயற்ற வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இச்சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட, 15 ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு நடவடிக்கையால், 2021 – 22ம் ஆண்டில், 934 ஆக இருந்த பாலின விகிதம், தற்போது 2025 — 26ம் ஆண்டில் 941 ஆக உயர்ந்துள்ளது. – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply