கிளிநொச்சியில் கரி நாள் அனுசரிப்பு; கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி!
கிளிநொச்சி
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (04-02-2026) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி, பசுமைப் பூங்கா வரை ஊர்வலமாக சென்றது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோஷங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப் பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்தியும், தமிழர் தாயகப் பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி, பதாதைகளைத் தாங்கியவாறு சென்றனர்.
அதேவேளை தமிழர்கள் இந்நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத் தாங்கியவாறு “சிங்கக்கொடி அவமானச் சின்னம், இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனக் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றபோது A9 பிரதான வீதியின் ஒருபக்க வழித்தடத்தில் வீதிப் போக்குவரத்து சிறிதுநேரம் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














