மேஜர் சந்திரன் (வள்ளுவன்) / லெப்டினன்ட் சிறி (ரைகர்தேவன்) | 10.09.1988

தமிழீழம்.

அவனைத் தாங்கின ஊர் ஆரையம்பதி.

சுற்றிவளைப்புக்களில் – எதிரிகளின் கழுகுத் தேடலுக்கு நடுவில் பலமுறை அங்கே தான் ஜெயம் இருந்தான்.

இம்முறை ஆரையம்பதி கிராமத்தைச் சிங்கள சிறீலங்காப் படை பெரிய எண்ணிக்கையில் வளைத்திருந்தது; இரண்டாயிரம் பேர் இருக்கலாம்கள்

முற்றுகையை உடைத்து, ஊருக்கு வெளியே பாய்வது என்று முடிவு செய்தான் ஜெயம், மரணத்தோடு விளையாடுவது அவனுக்குப் புதியதல்ல. ஆனால் இம்முறை மரணம் அவனுக்கு மிகவும் பக்கத்தில் இருந்தது.

வீட்டு வேலிகளால் தாவி, ஆரையம்பதியின் பின்புறமாய்க் கிடந்த உப்பாற்றங்கரைக்கு வந்தான். அவனை நன்றாகத் தெரிந்த மீன்பிடித் தொழிலாளர் இருவர் தோணியோடு காத்திருந்தார்கள்.

ஒருவன் சொன்னான்:

” ஏறு தம்பி தோணியில…… இந்த உதவியைக் கூடச் செய்யல்ல எண்டா, நாங்க மனுசனுகளா என்ன?” )

தோணி உப்பாற்றில் இறங்கிற்று.

ஊரினுள்ளே துப்பாக்கிகளின் உறுமல் ஓசை – நாய்களின் ஊளைக்கூச்சல் – விட்டு விட்டு மனித ஒலங்கள்.

அவர்கள் தோணியை விரைவாகவும் அக்கறையோடும் ஓட்டினார்கள்.

தோணி கூப்பிடு தூரத்துக்குப் போகவில்லை …… கரையிலே இருந்த சிங்களப் படையின் துப்பாக்கிகள் தோணியை நோக்கி வெறிகொண்டு உறுமத் தொடங்கின.

ஜெயத்தையும் தோணியையும் அவர்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். தொடர் துப்பாக்கிக் குண்டுகளின் நடுவே – உப்பாற்றைக் கிழித்துத் தோணி பறந்தது

சில மணித்துளிகள் தான்,

தோணியைச் சிறீலங்காப் படையின் ஹெலி கொப்டர் ஒன்று துரத்தத் தொடங்கிற்று.

வானத்திலிருந்து ‘சடசட’ என்று துப்பாக்கிக் குண்டுகள் தோணியை நோக்கிப் பாய்ந்தன.

தோணிக்காரர்கள் இருவரும் தன் – முன்னே பிணங்களாகச் சுருண்டபோது, ஜெயம் துடியாய்த் துடித்தான்.

ஜெயத்தின் கண்களில் நீர் பொங்கிற்று. தன்னைப்பற்றி அவன் கொஞ்சமும் கவலைப் படவில்லை. ஆனால் விடுதலைப்புலி ஒருவனைக் காப்பாற்ற தோணியையும் தள்ளிக் கொண்டு வந்தார்களே

அவர்கள் பிணங்களாய் ……

ஒரு துப்பாக்கிக் குண்டு தோணியில் துளைபோட்டபோது தோணி நீருள்ளே அமிழ்ந்தியபோது – ஜெயம் தண்ணீரில் குதித்துச் சுழியோடத் தொடங்கினான்.

உப்பாற்று நீரை மூடிக்கிடந்த ‘சல்வீனியா’ மிதப்புச் செடிகளில், உடல் மறைத்து நீந்தினான் அவன்.

இன்னுந்தான் ஹெலிகொப்டர் பாதி – கவிழ்ந்த தோணியைச் சுற்றிக் குண்டுகளைப்பொழிந்து கொண்டிருந்தது. ” தீர்ந்தார்கள் எல்லோரும்” என்று முடிவுகட்டிய ஹெலி கொப்டர், அந்த இடத்தை விட்டுத் திரும்பியது.

நான்கு மணிநேரம் நீந்தி, உப்பாற்றின் நடுவில் இருந்த ஒரு தீவை அடைந்தான் ஜெயம். குடல் காய்ந்து நாக்கு வரண்ட நிலையில் – கண்ணாச் செடியில் கூடுகட்டி இருந்த கொக்கின் முட்டைகளைப் பச்சையாகவே அவன் குடித்தான்,

“ஜெயத்தின் கதை முடிந்தது’ என்றே ஆரையம்பதியில் பேசிக்கொண்டார்கள்.

ஊர் கண்ணீரில் மூழ்கியது. ஆனால்

தீவில் இருந்து பல மணிநேரம் நீந்தி, மறுநாளே அவன் ஆரையம்பதி திரும்பினான். 1986-1987 காலப்பகுதியில் இது நடந்தது.

அந்த விடுதலைப் புலியின் வாழ்க்கையில், இப்படித்தான் அடிக்கடி உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள்.

16-2-1945 இல் மட்டக்களப்பில் – அமிர்த கழி என்னும் சிற்றூரில் ஜெயம் பிறந்தான். தந்தை பெயர் காத்தமுத்து; தாய் பெயர் அழகம்மா. எழிலான உப்பாற்றங்கரையில் வீடு. நிலா வெளிச்சத்தில் தோணியில் ஏறி உப்பாற்றை வலம்வருவான் ஜெயம்.

அப்போதெல்லாம் – ஜெயத்தின் புல்லாங் குழல் இசையில் உப்பாறு மெய்சிலிர்க்கும்.

உப்பாற்றின் அலைகளில் விடுதலையின் உயிர்த்துடிப்பை அவன் கண்டான், மீன்கள் துள்ளிப் பாயும் – நிலா வெளிச்சத்தில் தோணிகள் கறுப்பு வாத்துக்களாய் நீந்தும் – கரையில் தென்னந்தோப்பு சிரிக்கும்.

ஜெயத்தின் தந்தை உறுதிமிக்க தமிழினப் பற்றாளராக இருந்தார். வீட்டில் பாய்ந்து பிள்ளைகளை அள்ளிச் செல்லும் படைவெறியர் தொல்லைக்கு, அடிக்கடி தாய் ஆளானாள்.

ஜெயத்தின் அண்ணன் – காசி ஆனந்தன்.

இந்தப் புரட்சிக் கவியின் வரலாற்றை அறியாதவர்கள் இல்லை. தனது பாடல்களால் விடுதலைக்கு உரமிட்டவர். தமிழனின் வாழ்வுக்கு விடுதலையே வழி என்று முழக்க மிட்டவர். மண்மீது பற்றுக்கொண்ட இளைஞர்களின் இதயங்களில் எழுச்சியை ஊட்டியவர். தமிழ் இளைஞர்களின் போராட்ட உணர்வுக்கு எண்ணெய் வார்த்தவர், அதனாலேயே தனது வாழ்க்கையின் 5 ஆண்டுகளைச் சிங்களச் சிறைகளில் கழித்தவர்.

தம்பி சுதர்சன் இரு ஆண்டுகளும், தங்கை சிவமலர் ஓராண்டு காலமும் சிறைவாசம் இருந்தனர். இந்தவீட்டில் – இந்தக் குடும் பத்தில்தான்- ஜெயமும் நெருப்போடு நெருப்பாய் இருந்தான்.

அந்த மெழுகுவர்த்தி பிற்காலத்தில், பிரபாகரன் தலைமையில் முழு வெளிச்சத்தை அள்ளிப் பொழிந்தது.

பதின்மூன்று வயதினிலேயே தமிழீழத்தின் அடிமைத் தளையை எப்படி ஒழித்துக் கட்டுவது என்ற ஆவலும் தவிப்பும், அவன் நெஞ்சில் அலை மோதிற்று…… – அறப் போராட்டங்கள் நடைபெற்ற காலம்,

– 1958 இல் அமிர்தகழியில் ஜெயத்தின் அண்ணன் காசி ஆனந்தன் சிங்கள சிறீலங்கா அரசால் கைதுசெய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். வாசலில் பொலிசார் காவலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஜெயம்

அந்த நாட்களில் பொலிசாரின் கட்டுப்பாட் டை மீறி, அவர்களுக்குத் தெரியாமல் அண்ணனின் கடிதங்களை வெளியே எடுத்துச் செல்வான்.


மேஜர் சந்திரன் (வள்ளுவன்)

காத்தமுத்து சிவஜெயம்
அமிர்தகழி, மட்டக்களப்பு
19.02.1945 – 10.09.1988

10.09.1988 – தாழங்குடா பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு


நகரத்திற்குத் தொலைவில் இருந்த மூலைப்புறக் கிராமங்களுக்கு எல்லாம் சின்ன வயதிலேயே மிதிவண்டியில் போய், விடுதலை விதையை நட்டவன் ஜெயம்.

மட்டுநகர் அரசினர் கல்லூரியில் (இந்துக் கல்லூரி) படித்த நாட்களில், அவன் நகர்ப்புற மாணவர்களை விடுதலை உணர்வில் தோய்த் தெடுத்தாள்.

– படிப்பு முடிந்து மலேரியா நோய்த்தடுப்பு வெளிக்கள அலுவலராகப் பணியாற்றிய காலத்தில், புல்லுமலை, கட்டுமுறிப்பு – புலி பாய்ந்த கல்-வடமுனை போன்ற தமிழீழத்தின் எல்லைப்புறக் கிராமங்களில் எல்லாம், தமிழீழ உணர்வைப் பரப்பினான் ஜெயம்

ஆயுதப்போர் ஒன்றின்மூலமே தமிழீழத்தின் விடுதலையைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை, ஜெயத்தின் நெஞ்சில் ஆழப்பதிந் திருந்தது.

1975 இல் சிறீலங்காப் பொலிசார் அவனைக் கைது செய்தனர். மட்டக்களப்பில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜன் செல்வநாயகத்தைக் கொலைசெய்ய முயன்றான் என்று, அவன்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கொழும் பிலிருந்த சிறீலங்கா அரசின் புலனாய்வுத் தலைமை நிலையமான நாலாவது மாடிக்கு, ஜெயம் கொண்டுசெல்லப்பட்டான்:

பிற்காலத்தில் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சி. ஐ. டி. இன்ஸ் பெக்டர் பஸ்தியாம்பிள்ளை தலைமையில் விசாரணை நடந்தது. கொடுமையான சித்திர வதைகளின் பின்பு, இரண்டு ஆண்டுகள் போஹம்பரை, வெலிக்கடை சிறைச்சாலைகளில் கொடிய சிறைவாசத்தை அனுபவித்தான். இக்காலத்தில் தான் அவன் வாழ்வில் மிகத் துயர்நிறைந்த நிகழ்வும் இருந்தது. கூடப்பிறந்த அண்ணன் காசி ஆனந்தனுடனும் தனது தம்பி சுதர்சனுடனும் ஒரே அறையில், ஒன்றாகவே சிறைவாசத்தை அனுபவித் தான்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் முதல் வளைய உறுப்பினர்களை, 1978 இல் ஜெயம் தான் சேர்த்துக்கொடுத்தான்.

எழுகதிர் மண்ணில் இது ஒரு  தொடக்கம்.

8-10-1984 இல் ஒரு நிகழ்வு.

புல்லுமலையில் இயக்கப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராமல் சிறீலங்காப் படை ஜெயத்தைக் கைது செய்தது.. ஆனால் ……. அவன்தான் ஜெயம் என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது. கல்லடி முகாமுக்குக் கொண்டுசென்றார்கள், தலை கீழாகத் தொங்கவிடப்பட்டு, இரும்புக்கம்பியால் முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டான்.

உடலின் மீது மின்சாரம் பாய்ச்சப்பட்டது. கடைசிவரை அவன் உறுதியாக இருந்தான்.

அவனை முஸ்லிமாக அடையாளம் காட்டும் பொய் அடையாள அட்டை – முஸ்லிமின் கோலத்தில் குறுந்தாடி – கையில் திருக்குர்ஆன் …… ஒரு விடுதலைப் புலியின் வழமையான கெரில்லாத் தந்திர உத்திகள்…. தலை யாட்டிகளால்கூட அவனை அடையாளம் காணமுடியாமல் போய்விட்டது.

ஜெயம் விடுதலையானான். ஆனால்,

அவன் கல்லடி முகாமில் இருந்தபோதே – வீட்டில் அவனைத் தேடி சிறீலங்காப் படை பாய்ந்தது. ஜெயத்தின் தங்கை சிவமலர், படைவெறியர்களால் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டாள். ஓராண்டு காலம் அவள் சிங்களச் சிறைகளில் கடும் சிறைவாசம் இருக்க நேர்ந்தது.

தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் மருத்துவப் பகுதியில் பணியாற்றிய ஜெயம், பின்பு தலைமைப்பீடத்தால், மிகப் பொறுப்பு வாய்ந்த மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட நிதிப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான்.

அடர்ந்த காடுகள் – சேற்று வயல் வெளிகள் – கொழுத்த அலை எறியும் ஆழ்கடல்கள் – நாலு திசைகளிலும் ஜெயம் சுழன்று பணியாற்றினான்.

ஒரு காலத்தில் –

அவன் மக்களுக்கு விடுதலை உணர்வை வட்டிய தமிழீழத்தின் காட்டுப்பகுதிகள் – எல்லைப்புறக் கிராமங்கள் – பிற்காலத்தில் விடுதலைப் புலிகளின் உறுதிமிக்க தளங்கள் ஆயின.

திருக்கோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தினுள் நுழையும் காட்டுவழிப் பாதையைப் புலிகளுக்குத் திறந்தவன் ஜெயம், 1987 ஐப்பசியில் இந்தியப் படை – விடுதலைப் புலிகள் போர் தொடங்கிற்று. மட்டக்களப்பில் – உப்பாற்றில் இந்தியப் படையினர் அடிக்கடி விசைப்படகில் போவதும் வருவதுமாக இருந்தார்கள். 

எழிலான மட்டுநகர் உப்பாறு, தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புலிகளை எத்தனையோ முறை காப்பாற்றி இருக்கிறது.

விடுதலைப் புலிகள் உப்பாற்றில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், நீரின் அடியில் கண்ணி வெடி வைப்பதென்று முடிவு செய்தார்கள். சிரமமான அந்த வேலையை நீரின் ஆழத்தில் சுழியேரடி, ஜெயமே செய்து முடித்தான்.

கூப்பிடு தூரத்தில் இந்தியப் படை முகாம் இருந்தது. பெருமுயற்சி. ஆனால்இந்தியப் படைப் படகு, உப்பாற்று வழியால் பின்பு ஏனோ ஓடவில்லை.

‘ அவர்கள் தப்பி விட்டார்களே ‘ என்று ஜெயம் குமுறினான். ‘ நீரில் – வானத்தில் – நிலத்தில் இந்தியப் படையை நிர்மூலம் செய்வோம் என்று முழங்கினான் இவன்,

மண்பறிப்பாளராக வந்த இந்தியப்படையை முற்றாக வெறுத்தான் ஜெயம். உப்பாறு கடலோடு கலக்கும் இடத்தில் “கலங்கரை விளக்கம்’ அமைந்த முகத்து வாரத்தில் – முகாமிட்டிருந்த இந்தியப் படை யின் ‘கப்பாலி ஸ் படைப் பிரிவு’, 1988 வைகாசி 10 இல் தனது 17 ஆவது ஆண்டு நிறைவைப் பெருவிழாவாக எடுப்பதாகவும், பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.

” எங்கள் பிணங்களின் மேல் இந்தியப் படைக்கு விழாவா? – என்று, எரிமலையாய் வெடித்தான் ஜெயம். புதுக்கவிதை ஒன்றை அவனே எழுதி – அதைத் துண்டறிக்கை வடிவில் மக்களிடையே பரப்பினான் – புயல் வீசிற்று. “பாவிகளே! விழாவைத்தா கொண்டாடு கிறீர்? 

நன்று ! 

ஆனால் … வெட்கமில்லாமல் எம்மை 

ஏன் அழைத்தீர்? 

விழாவா? விருந்தா? 

நீங்கள் கொடுக்கும் 

உணவு வகைகள் 

எங்கள் சுதந்திரப் பசியைத் தணிக்காது! 

விழாவுக்காய் நீங்கள் போடும் 

பந்தல்களை 

எம்மை 

விழவைத்துக் கொல்லும் 

பொறியாகவே நினைப்போம்! 

தன் மான முள்ள தமிழன். 

உங்கள் விழாவில் 

கலந்துகொள்ள மாட்டான்!

மக்களை ஜெயத்தின் கருத்து, மனஉணர்வால் உலுக்கிற்று. அந்த விழாவில் ஒரு தமிழன்கூடக் கலந்து கொள்ளவில்லை. கவிஞனாகவும் – கலைஞனாகவும் இருந்தான் –ஜெயம். அந்த ஆற்றல் அனைத்தும் தமிழீழ விடுதலைப் போருக்கே கருவி ஆயிற்று.

புலிகளின் முகாம்களில் வீரர்களுக்குத் தெம்பூட்ட ஜெயம் புல்லாங்குழல் இசைப்பான்.

இளமாலை வேளைகளில் காட்டுமரங்களின் கீழ் அவர்கள் உட்கார்ந்திருப்பார்கள்.

கரிய இலைக் கொத்துக்களின் ஊடே வழியும் ஞாயிற்றின் ஒளிக்கதிர்கள், கண்ணாடித் துண்டுகளாய் விழும், கூடுநோக்கி வரும் குருவிகளின் ‘கீச் ‘ ஒலியிடையே எழும் ஜெயத்தின் குழலோசையில், புலிகள் மெய் சிலிர்ப்பார்கள்.

இளம் வயதில் பல மேடை நாடகங்களில் ஜெயம் நடிகனாய்த் தோன்றி, மக்களிடையே இலட்சிய நெருப்பை அள்ளி இறைத்த நாட்களும் உண்டு.

புலிகள் – இந்தியப்படை போரின் போது, கொடிய எதிரிகளின் படை முகாம்களுக்கு நடுவில் ஜெயம் புயலாக வீசினான்.

மட்டக்களப்பில் – பல கிராமங்களில் மாறிமாறி வாழ்ந்த காலம்.

சாவதற்கு மூன்று திங்களுக்கு முன்புதன் அண்ணனுக்கு எழுதிய ஒரு கடிதததில் குறிப்பிடுகிறான் :

” சுற்றிவளைப்புகளும் சித்திரவதைகளும் நடக்காத நாட்களே இல்லை. இங்கு இன்றும் ஒரு முகாம் அமைத்தார்கள். இந்தச்சிறு ஊருக்குள்ளும் இரு முகாம்கள் உண்டு.

குண்டுகளுக்கு நடுவில்தான் அந்த விடுதலைப் புலி குடியிருந்தது.

1988 ஐப்பசி 10.

கொடுமையான நாள். இருண்ட முகில்களால் வானம் மூடப்பட்டிருந்தது. தாழங்குடா கிராமத்தில் ஜெயம் இருந்தான். 

காலை 7 மணி.


லெப்டினன்ட் சிறி (ரைகர்தேவன்)

தம்பிப்பிள்ளை செந்தில்நாதன்
புதூர், மட்டக்களப்பு
12.08.1964 – 10.09.1988

10.09.1988 – தாழங்குடா பகுதியில் இந்தியப் படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு


அப்போதுதான் குளித்துவிட்டு வந்து தலையைத் துடைத்துக்கொண்டிருந்தான் ஜெயம்; கடைசிக் குளிப்பு. 

பின்புற வேலி ஓரத்தில் நாய்கள் வெறி கொண்டு குலைத்தன.

திடீரென, தெருப்பக்கம் துப்பாக்கி முழக்கம் கேட்டது.

தன்னோடு கூட உயிர்காக்கும் தோழனாய் இருந்த விடுதலைப் புலி சிறீ, இந்தியப் படையுடன் மோது கிறான் என்பதை அவன் புரிந்து கொண்டான். ஆனால் அந்தத்துப்பாக்கி வேட்டோசைகள் சில வினாடிக ளிலேயே அடங்கிப்போய்விட்டன. 

சிறீயின் கதை முடிந்துவிட்டது.

முரட்டுத்தனமான இரும்புக் காலடி ஓசைகள் இப்போது அவன் பக்கத்திலேயே கேட்டன. தப்பமுடியாதவாறு அவன் வளைக் கப்பட்டிருந்தான். வேலிகளை உடைத்துக் கொண்டு இந்தியப் படை வெறியர்கள் உள்ளே பாய்ந்தார்கள்.

அந்த வேங்கையின் கண்கள் குருதிச் சிவப்பாயிற்று.

கழுத்து மாலையில் தொங்கிய குப்பியை உறுமிக் கடித்தான், ஜெயம். ஓய்வே இன்றித் தமிழீழ மண்ணில், விடுதலைக்காய் முப்பது ஆண்டுகள் ஓடிச் சுழன்ற ஒப்பற்ற மேனி ஓய்ந்தது.!

அந்த நாளை யாரால் மறக்க முடியும்?

ஜெயத்தின் அமிர்தகழி வீட்டில் – கட்டிலில் – அவன் பிணமாய்க் கிடக்கிறான், எல்லோரும் அவனைச் சுற்றிவளைத்து உட்கார்ந்திருந்து அழுகிறார்கள். அவர்களில் ஒருத்தி… அவன் காதலி! ஒரு புல்லாங்குழலை இவன் பக்கத்தில் வைத்து, அழுது புலம்புகிறாள்.

– ஜெயத்தின் வாழ்வில் ஓர் இனிய காதல் இருந்தது.

அந்தக் காதலும், 

கண்ணீராய் … அழுகையாய் …

புதைகுழியில் ஜெயத்தை வைத்தபோது, அவன் ஆசையுடன் வாசித்து மகிழும் புல்லாங்குழலையும் பக்கத்தில் வைத்தே புதைத்தார்கள்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *