” போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது பாதுகாப்பு சாதனங்களை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்” என மாணவர்களுக்கு நேபாள ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நேபாளத்தில் சமூக வலைதளங்களை அரசு முடக்கியதை கண்டித்து அந்நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியது. தடை மீறப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். பார்லிமென்ட், அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு தீவைத்தனர். அரசியல்வாதிகள் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கப்பட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனால், அரசியல் குழப்பம் ஏற்படவே அங்கு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்தெல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது: போராட்டங்களை மாணவர்கள் கைவிட்டுவிட்டு சுமூகமான தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். தற்போதைய கடினமான சூழ்நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டி உள்ளது. நமது நாட்டின் வரலாற்றும் மற்றும் பாரம்பரியத்தையும், அரசு மற்றும் பொதுச்சொத்துகளை பாதுகாக்க வேண்டி உள்ளது. பொது மக்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டி உள்ளது. தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில், ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் , வெடிமருந்துகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும். யாரேனும் அதனை வைத்து இருந்தால், அருகில் உள்ள பாதுகாப்பு அமைப்பு அல்லது பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த ஆயுதங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தரலாம். அவர்களை ஆயுதங்களை ஒப்படைக்க அறிவுறுத்தலாம். இதனை மீறி யாரேனும் ஆயுதங்களை வைத்து இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.