EPDP கொலைப் பட்டியல் அம்பலம் – முன்னாள் உறுப்பினரின் அதிர்ச்சி வெளிப்பாடு..!

யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) மேற்கொண்டதாகக் கூறப்படும் பல படுகொலைச் சம்பவங்கள் குறித்து அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் அதிர்ச்சிகரமான சாட்சியங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண ஊடக நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது, சதா என அழைக்கப்படும் சுப்பையா பொன்னையா இவ்வமைப்பை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:

“நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், EPDP மேற்கொண்ட படுகொலைகள் குறித்து நான் சாட்சியம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். இந்தக் கொலைகளில் பலர் குற்றமற்ற பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆவர்,” என்று தெரிவித்துள்ளார்.

1990 ஆகஸ்ட் மாத இறுதியில், மண்டைதீவு பகுதி இராணுவ முற்றுகைக்குள் இருந்த போது, அங்குச் சிக்கியிருந்த 15–20 பேரை இராணுவத்தினர் பிடித்து வைத்திருந்தனர்.
அவர்களை EPDP தலைவன் டக்ளஸ் தேவானந்தா பார்க்க வேண்டும் எனக் கூறி நேரில் சென்று பார்த்ததாக சதா தெரிவித்துள்ளார்.

“அவர்களில் 13 வயது சிறுவனும் ஒருவர் இருந்தான். நாங்கள் பார்த்து வந்த சில நிமிடங்களில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்,” எனவும் அவர் கூறினார்.

அடுத்து, நெடுந்தீவை கைப்பற்றிய பின்னர் அங்கிருந்த அரசு உத்தியோகஸ்தர் நிக்லஸ் என்பவரை அழைத்துவரச் சொன்னதாகவும், அவர் மறுத்ததால் அடித்து சித்திரவதை செய்தபோது உயிரிழந்ததாகவும் சதா கூறினார்.

“அவரது உடலை தூக்கில் தொங்க விட்டனர்,” என அவர் சாட்சியமளித்தார்.

டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாதுகாவலரை “புலிகளுடன் தொடர்பு” என்ற காரணத்தால் கொன்றதாகவும், நெல்லியடியில் சேர்ந்த சட்டத்தரணி மகேஸ்வரியை EPDP கொலை செய்ததாகவும் அவர் சாட்சியமளித்தார்.

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் (ரமேஷ்) அவர்களும் தம்முடன் முரண்பட்டதால் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“அந்தக் கொலைகளை புலிகள் செய்ததாகக் கூறினார்கள். ஆனால் உண்மையில் புலிகள் அவரைக் கொலை செய்யவில்லை. இவர்களே செய்தனர்,” என்று சதா வலியுறுத்தினார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர் K.S. ராஜாவையும் EPDP தான் கொலை செய்ததாக சதா வெளிப்படுத்தினார்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வந்து தமது ஊடகப்பணிகளில் ஈடுபடுத்திய பின்னர், அவர் முரண்பட்டதற்காக காலி முகத்திடல் கடற்கரையில் மதுபானத்தில் சைனட் கலக்கி கொலை செய்ததாகவும் அவர் சாட்சியம் அளித்துள்ளார்.

இந்தச் சாட்சியங்கள் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. EPDP மேற்கொண்டதாகக் கூறப்படும் இக்கொலைச் சம்பவங்கள் குறித்து சுயாதீனமும் நீதிமிக்கதுமான விசாரணை தேவைப்படுகிறது என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர்
10/09/2025


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *