மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும் நிலை ஏற்படும் – டானியல் வசந்தன்

மன்னார்

மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் குறித்த விசாரணைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது. விசாரணைக் குழுக்களும் வருகை தந்து விசாரணைகளை தொடங்கியுள்ளது. மிக விரைவில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும் நிலை ஏற்படும் என மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று வியாழக்கிழமை (11.09.2025) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

மன்னார் நகர சபையினால் பல்வேறு விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மன்னாரில் ஞாயிறு தினங்களில் காலை முதல் பகல் 2 மணி வரை தனியார் வகுப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மன்னார் நகரத்தில் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக புதிய நடைமுறைகளை அமுல்படுத்துகின்றோம். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக மன்னார் நகரத்தில் பஸ் போக்குவரத்து சபை மற்றும் தரிப்பிடத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றோம். பல இடங்களில் ஒரு வழிச்சாலையாகவும், வாகனங்களை தரித்து நிறுத்துவதற்காக பல இடங்களை அடையாளப்படுத்தி இருக்கிறோம்.

மேலும் மன்னார் நகர சபைக்குட்பட்ட காணிகளை எல்லைப்படுத்தி அந்த காணிகளை துப்புரவு செய்து எல்லைப்படுத்துவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

மேலும், மன்னார் நகரத்தில் எவ்வித மணல் அகழ்வும் இடம்பெற அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்விதத்திலும் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகரத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக எமது பஸ் தரிப்பு நிலையத்தில் வெற்றிலை எச்சில் துப்புதல், புகைத்தல், முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் சிறுநீர் கழித்தலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையினால் இவ்விடயங்கள் குறித்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் கட்டுப்பாடுகளை விதிப்போம். மக்கள் குறித்த சட்டங்களை கடைபிடிக்க வேண்டும்.

மன்னார் நகர சபையில்  இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரணைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது. விசாரணைக் குழுக்களும் வருகை தந்து விசாரணைகளை தொடங்கியுள்ளது.

ஆளுநர் அலுவலகத்தில் இருந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து குழு ஒன்று வருகை தந்து ஆவணங்களை பரிசீலித்துச் சென்றுள்ளனர்.

மிக விரைவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும் நிலை ஏற்படும். மன்னார் நகர சபைக்கு ஏற்பட்ட நஷ்டம் மீள கிடைக்கப்பெறும்.

எனவே மக்கள் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். எதிர்வரும் வாரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மன்னார் நகரத்தில் அடாவடித்தனத்துடன் மக்களின் போக்குவரத்து பாதைகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *