அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நெருக்கமானவரும், அவரது தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், 31, பல்கலையில் சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். இதனை டிரம்ப் உறுதி செய்துள்ளார். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சார்லி கிர்க்கின் படுகொலையில் சந்தேக நபர் 22 வயதான உட்டாவைச் சேர்ந்த டைலர் ராபின்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் சார்லி கிர்க். இவர், தன் 18 வயதில், டர்னிங் பாயிண்ட் யு.எஸ்.ஏ., என்ற பழமைவாத இளைஞர் அமைப்பினை துவக்கினார். கிர்க், குறிப்பாக இளைஞர்களிடையே பழமைவாதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக கல்லுாரி வளாகங்களில் பேச்சு மற்றும் விவாத நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சிக்காக வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். இதையடுத்து, அவருக்கு மிகவும் நெருக்கமானார்.
இந்நிலையில், அமெரிக்காவின் யூடா மாகாணம், ஓரெம் நகரில் உள்ள யூடா வேலி பல்கலைக்கு நேற்று முன்தினம் சார்லி கிர்க் சென்றிருந்தார். அங்கு கல்லுாரி மாணவர்களிடையே குடியரசு கட்சிக்கு ஆதரவு திரட்டும் ‘அமெரிக்கன் கம்பேக் டூர்’ பிரசார இயக்கத்தை நடத்தினார்.அவரது பேச்சை கேட்க நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு இருந்தனர்.
அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி வன்முறை கலாசாரம் குறித்து பார்வையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில், கழுத்தில் குண்டுபாய்ந்து, சார்லி கிர்க் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குற்றவாளியின் புகைப்படம் மற்றும் சம்பவ இடத்தில் இருந்து அவர் தப்பியோடும் வீடியோ காட்சிகளை வெளியிட்ட எப்பிஐ போலீசார், தகவல் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்து இருந்தது.
இந்நிலையில் சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றதில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்ததாக அந்நாட்டில் தகவல் வெளியானது.
அதேநேரத்தில் குற்றவாளியை கைது செய்துவிட்டதாக அதிபர் டிரம்ப் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், அவருக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குற்றவாளி கைது செய்யப்பட்டது குறித்தும், அவரின் விபரம் குறித்தும் போலீசார் விரைவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.