பருத்தித்துறை துறைமுக மேம்பாடு குறித்து இந்தியக் குழு ஆய்வு நடத்துகிறது.

பருத்தித்துறை

இந்திய அரசின் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு முன்னணி நிறுவனமான, மத்திய கடலோரப் பொறியியல் மற்றும் மீன்வள நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர், கடந்த 8 முதல் 12 வரை இலங்கைக்கு விஜயம் செய்தனர். இந்த விஜயம், வடக்கு மாகாணத்தில் முன்மொழியப்பட்ட பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தியதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்த குழுவினர், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரைச் சந்தித்து, அமைச்சின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பொருத்தமான வழிமுறைகள் குறித்து இந்த கலந்துரையாடல்கில் மையப்படுத்தப்பட்டன. இந்தக் குழுவினர் கடந்த 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஏனைய உள்ளுர் பங்குதாரர்களுடன் இணைந்து, பருத்தித்துறையில் முன்மொழியப்பட்ட திட்ட இடத்திற்கு தொழில்நுட்ப விஜயங்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த முயற்சி, இலங்கையில் மீன்பிடி துறைமுகங்களின் அபிவிருத்தி குறித்த ஒத்துழைப்புக்காக, 2022 மார்ச் மாதம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகும். இது மீன்வள உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய அபிவிருத்தி ஆகியவற்றில் வளர்ந்து வரும் இந்தியா-இலங்கை பங்காளித்துவத்தை எடுத்துக்காட்டுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *