உலகின் முதல் AI அமைச்சரை அல்பேனிய அரசாங்கம் நியமித்துள்ளது.
டிரானா : ‘ஏஐ’ எனப்படும், செயற்கை நுண்ணறிவு அமைச்சரை, அல்பேனியா அரசு நியமித்துள்ளது. மெய்நிகர் வடிவில் செயல்படும் இந்த அமைச்சர், ஒப்பந்தப் பணிகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை, 100 சதவீதம் தடுக்க வழிவகுக்கும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அல்பேனியாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. இதன் வாயிலாக தொடர்ந்து நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக எடி ரமா பொறுப்பேற்றார்.
இந்நிலையில் சோஷலிஸ்ட் கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, ஏஐ அமைச்சருக்கான அறிவிப்பை பிரதமர் எடி ரமா வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலாக ‘டியெல்லா’ என்ற அமைச்சரும் இந்த அரசில் அங்கம் வகிப்பார். அல்பேனிய மொழியில் இதன் அர்த்தம் சூரியன். மெய்நிகர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைச்சர், அரசு ஒப்பந்தப் பணிகள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் நிர்வகிப்பார். இதன் வாயிலாக 100 சதவீதம் ஊழல் முறைகேடுகள் இன்றி, ஒப்பந்த புள்ளிகள் சமர்ப்பிக்கப்படும். ஒவ்வொரு பொது நிதியும் முற்றிலும் வெளிப்படையானதாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த ஜனவரியில், அந்நாட்டு அரசின் டிஜிட்டல் உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட டியெல்லா, இதுவரை 36,600 டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சுமார் 1,000 சேவைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.