இலங்கை மின்சார வாரியத்தின் 23,000 ஊழியர்கள் 4 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் – எரிசக்தி அமைச்சர்

புதிய மறுசீரமைப்புக்கமைய இலங்கை மின்சார சபையின் 23 ஆயிரம் சேவையாளர்கள் அரசுக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படுவார்கள். இந்நிறுவனங்களுக்கு செல்ல விருப்பமில்லாத ஊழியர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவையில் இருந்து விலகலாம். அவ்வாறு விலகுபவர்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நட்டஈடு சூத்திரத்துக்கமைய குறைந்தபட்சம் 50 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி தெரிவித்தார்.

மின்சார சபை தொழிற்சங்கத்தினரில் ஒருதரப்பினர் குறுகிய நோக்கங்களை முன்னிலைப்படுத்தி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம்.இனியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காலத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (15.09.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் மின்கட்டமைப்பு மறுசீரமைப்பில் இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு பிரதான அம்சமாக காணப்படுகிறது.மின்சாரசபையின் கட்டமைப்பு முழுமையாக மறுசீரமைக்கப்படும்.சபையின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நான்கு நிறுவன கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.

மின்சார சபையின் பொறுப்புக்கள் மற்றும் சொத்துக்கள் நிறுவன கட்டமைப்பின் அடிப்படையில் வேறுபடுத்தப்படும்.மின்சார சபையின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து தற்போது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

சட்டத்தின் பிரகாரம் மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டும்.மின்சார சட்டத்தை திருத்தம் செய்யாமல் இருந்திருந்தால் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கமைய 12 ஆயிரம் ஊழியர்களை சேவையில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

தொழிலாளர்களின் உரிமைகளை முடக்கவோ அல்லது அவர்களை சேவையில் இருந்து நீக்கவோ நாம் கருதவில்லை.காலத்தின் தேவைக்கேற்ப மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும். இதற்கமைய 2007 ஆம் இலக்க கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 4 நிறுவனங்களிடமே இலங்கை  மின்சார சபையின் பொறுப்புக்கள் மற்றும் பணிகள் கையளிக்கப்படுகின்றன.இந்நிறுவனங்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமானவை.

இலங்கை மின்சாரசபையின் 23 ஆயிரம் சேவையாளர்கள் இந்த நான்கு நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படுவார்கள்.இந்நிறுவனங்களுக்கு செல்ல விருப்பமில்லாத ஊழியர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவையில் இருந்து விலகலாம்.அவ்வாறு விலகுபவர்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நட்டஈடு சூத்திரத்துக்கமைய குறைந்தபட்சம் 50 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்படும்.

மின்சார சபை தொழிற்சங்கத்தினரில் ஒருதரப்பினர் குறுகிய நோக்கங்களை முன்னிலைப்படுத்தி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம்.இனியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. மின்கட்டமைப்பை பயனுடையதாக்குவதற்காகவே இந்த மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *