“சார்லி கிர்க் படுகொலையை கொண்டாடிய அயல்நாட்டினர், நாடு கடத்தப்பட உள்ளனர்.” – மார்கோ ரூபியோ

வாஷிங்டன்,

அண்மையில் அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி ஒன்றில் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் அதிபர் டிரம்பின் ஆதரவாளர் மற்றும் டர்னிங் பாயிண்ட் என்று நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருந்து வந்தார். வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவதற்கு எதிராகவும் பிரசாரம் செய்து வந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர் கொல்லப்பட்ட நிகழ்வு, அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அரங்கேற்றிய டைலர் ராபின்சன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சார்லி கிர்க் படுகொலையை, அந்த நாட்டில் வசிக்கும் சிலர் கொண்டாடினர். அப்படி கொண்டாடியவர்கள் நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது இவ்வாறு கூறி இருக்கிறார்.

அவர் மேலும் கூறியதாவது;

எங்களின் குடிமகன் கொல்லப்பட்ட நிகழ்வை கொண்டாடிய வெளிநாட்டினரை ஏற்கவே முடியாது. இப்படிப்பட்ட நபர்களை அமெரிக்கா வரவேற்காது. இதுபோன்ற கொலைகளை நியாயப்படுத்தும் அல்லது கொண்டாடும் நபர்களை அமெரிக்காவில் நுழையவோ அல்லது தங்கவோ அனுமதிக்கக்கூடாது.

இப்படி கொண்டாடுவர்கள் இங்கே(அமெரிக்கா) இருந்தால் அவர்களுக்கு நாம் விசா வழங்கக் கூடாது. அவர்கள் ஏற்கனவே இங்கே இருந்தால் அவர்களின் விசாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மார்க் ரூபியோ கூறினார்.

தொலைக்காட்சியில் தான் பேசிய வீடியோவை அவர், எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அதில், இங்கு விசா பெற்றுக் கொண்டு அமெரிக்கரின் படுகொலையை கொண்டாடினால், நாடு கடத்தப்பட தயாராகுங்கள், உங்களுக்கு இந்நாட்டில் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *