“ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களின் கைகளில் அதிக பணத்தை மிச்சப்படுத்தும்” என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

விசாகப்பட்டினம்,

ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இருந்த 4 வரி அடுக்குகள் 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 12, 28 சதவீதம் என்ற அடுக்குகள் நீக்கப்பட்டுள்ளன. 5, 18 சதவீத அடுக்குகள் மட்டுமே நீடிக்கிறது. இது வரும் 22ம் தேதி அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் 12 சதவீத அடுக்கில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 28 சதவீத அடுக்கில் இருந்த 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரம்புக்குள் வந்துள்ளது.

இதன் பலன்கள் அமலுக்கு வருவதற்கு முன்னரே, அதனை ஏராளமான நிறுவனங்கள், மக்களுக்கு வழங்க துவங்கிவிட்டன. தற்போதுள்ள 2 வரி அடுக்குகள் காரணமாக இந்திய பொருளாதாரத்திற்குள் ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்படும். மக்களின் கைகளில் பணம் புழங்கும்.

ஜிஎஸ்டி மூலம் 2018 ம் ஆண்டில் ரூ.7.19 லட்சம் கோடி வருமானம் கிடைத்த நிலையில், 2025ம் ஆண்டு ரூ.22.08 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் 65 லட்சத்தில் இருந்து ரூ.1.51 கோடியாக அதிகரித்துள்ளது. கூட்டாட்சி ஒத்துழைப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சிறந்த உதாரணமாக உள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு அரசியல்சாசனப்படி துவக்கப்பட்ட அமைப்பு இதுவாகும்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வரி கட்டமைப்பு வரி பயங்கரவாதம் போல் இருந்தது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்தது. அப்போது ஜிஎஸ்டி அமல்படுத்த முயற்சிக்கவில்லை. மாநில அரசுகளுடன் ஆலோசிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *