பரிசோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய போது அதனை அரசாங்கம் உதாசீனப்படுத்தியது. ஆனால் இன்று அவ்வாறு விடுவிக்கப்பட்ட இரு கொள்கலன்களில் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்ட எஞ்சிய கொள்கலன்களில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல் மக்கள் அச்சத்திலிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (16.09.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்;
ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை மறந்து விட்டது. மாறாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து அடக்குமுறைகளும், ஜனநாயக மீறல்களுமே இடம்பெற்று வருகின்றன. இவற்றை விடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய எந்தவொரு முக்கிய நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை. விவசாயிகள் முதல் சகல துறையினரும் இன்று வீதிகளிலேயே இருக்கின்றனர்.
வெகு விரைவில் நாட்டிலுள்ள மாணவர்கள் குப்பி விளக்கின் வெளிச்சத்தில் கல்வி கற்கும் மோசமான நிலைமை ஏற்படுமா என்ற அச்சம் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பெருமிதமாகப் பேசிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்துக்கு நாட்டு மக்களுக்கு சோறும் உப்பும் கூட திறம்பட வழங்க முடியவில்லை.
பரிசோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய போது அதனை அரசாங்கம் உதாசீனப்படுத்தியது. ஆனால் இன்று அவ்வாறு விடுவிக்கப்பட்ட இரு கொள்கலன்களில் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது இரு கொள்கலன்களின் உள்ள பொருட்கள் என்ன என்பது மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் எஞ்சியவற்றில் எவ்வாறான ஆபத்தான பொருட்கள் உள்ளன என்பது அரசாங்கத்தை தவிர வேறு யாருக்கும் தெரியாது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம். காமினி திஸாநாயக்க, ரணசிங்க பிரேமதாச, ஜே.ஆர்.ஜயவர்தன போன்ற முன்னாள் ஜனாதிபதிகள் மக்களுக்காக முன்னெடுத்த வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில், பஸ் தரிப்பிடமொன்றை புதுப்பிப்பது பெரிய விடயமல்ல.
அது வரவேற்கக் கூடிய விடயம் எனினும், அதனை விட மக்களுக்கு பல முக்கிய தேவைகள் உள்ளன என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்துகின்றோம். பஸ் தரிப்பிடத்தை புதுப்பிப்பதற்கு முன்னர் மாதந்தோரும் இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முதலில் எடுக்கப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு அரசாங்கம் எந்தளவு முக்கியத்துவமளித்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
கட்டுவாப்பிட்டி தேவாலயத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்படுவார் எனக் கூறினார். ஆனால் குறைந்தபட்சம் ஒரு சந்தேகநபரேனும் இந்த ஆட்சி காலத்தில் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அந்த பதவியை வகிப்பது பொறுத்தமற்றது என்பதை அருட்தந்தை சிறில் காமினி வலியுறுத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியில் நாம் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்த போதிலும், சபாநாயகரால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் எந்தளவுக்கு வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றார்.