சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
தமிழக சட்டசபையில் கவர்னர் உரை, பட்ஜெட், துறை மானிய கோரிக்கைகள் விவாதத்தில், அரசின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
இந்த அறிவிப்புகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, குறிப்பிட்ட கால இடைவெளியில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், தலைமை செயலர், முதல்வர் நிலையில் ஆய்வு செய்யப்படும்.

இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2021ல், புதிய ஆட்சி அமைந்த பின், நடப்பு நிதி ஆண்டு வரை, 8,634 அறிவிப்பு கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதில் 4,516 அறிவிப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளன; அதில், 3,455 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், 256 அறிவிப்புகள் செயல்படுத்த சாத்தியக்கூறு இல்லை என்பதால், அவற்றை கைவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவை தவிர, அரசாணை, நிர்வாக உத்தரவுகளுக்காக, 381 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன. இந்த விபரங்கள், தலைமை செயலர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.
செயல்படுத்த முடி யாது என்று தெரியவந்த அறிவிப்புகளை கைவிட நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, எரிசக்தி துறை வெளியிட்ட மின் கேபிள்களை புதைவட கேபிள்களாக மாற்றும் திட்டம்; சென்னையில், நியூ ஆவடி சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை விரிவாக்க திட்டம், நந்தனம், அண்ணா சாலையில் உயர் கட்ட டங்களை இணைக்கும் வான் பாலம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் கைவிடப்படுகின்றன. – இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்றால், அதை செயல்படுத்துவதற்கான குறைந்தபட்ச சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதை, அதிகாரிகள் தான் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும்.
நிலம், நிதி சார்ந்த பல்வேறு பிரச்னைகளால், சில திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். ஆனால், சாத்தியக்கூறு பார்த்து வெளியிடப்பட்ட அறிவிப்புகளும் நிலுவையில் இருப்பதை தவிர்க்க, மேலதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
