அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும்! மதிப்பளிப்பு நிகழ்வும்!

சுவிட்சர்லாந்து

புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலையினை வளர்த்தெடுக்கும் பணியினை முன்னெடுத்து வரும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும் கடந்த 14.09.2025 ஞாயிற்றுக் கிழமை அன்று பேர்ண் மாநகரின் புறூக்டோப் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்ட படிப்புகளின் பீடாதிபதி முதுநிலைப் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முதுநிலை வாழ்நாள் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் ஓய்வுநிலை ஆய்வுப்பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்க்கலையினை முன்னெடுத்துவரும் தமிழ்க்கலை ஆசிரியர்கள் சேவைக்கால அடிப்படையில் மதிப்பளிக்கப்பட்டதுடன் 25 வருடங்களிற்கு மேலாக கலைப்பணியாற்றிய 11 கலை ஆசிரியர்களிற்கு “கலைச்சுடர்” விருது வழங்கியதோடு பரதக்கலையில் முனைவர் பட்டத்தினைப்பெற்ற முனைவர் மதிவதனி சுதாகரன் அவர்களிற்கும், முனைவர் சந்திரவதனி விஜயசுந்தரம் அவர்களிற்கும் சிறப்பு மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வானது அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் தேர்வு விதி முறைக்கு அமைவாக தேர்விற்கு தோற்றி ஆற்றுகைத்தரத்தினை நிறைவுசெய்த நடனம் – பரதம், இசை – வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம் ஆகிய துறைகளைச்சேர்ந்ந 131 மாணவர்களிற்கும் “பரதக்கலைமணி”, “இசைக்கலைமணி” ஆகிய பட்டயச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து தமிழ்க்கலையில் மூன்று பாடங்களிலும் பட்டயச் சான்றிதழ்களைப் பெற்ற மூன்று மாணவர்களிற்கு சிறப்பு மதிப்பளிப்பு வழங்கப்பட்டதோடு துறைசார் பாடங்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களிற்கு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் நிறுவுநர் இறைபதமடைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஞாபகார்த்த விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

சிறப்புநிகழ்வாக நிறுவகத்தின் வெள்ளிவிழா மற்றும் மதிப்பளிப்பு நிகழ்வுகளை உள்ளடக்கிய சிறப்புமலரும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கலையினையும் அதன் நெறி முறைகளையும் ஒருங்கிணைப்பதற்காக தமிழ்த் தேசியத்தின் பணிப்பில் தேசிய உணர்வோடு மறைந்த முதுநிலை தமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் தலைமையில் 2000 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மாதம் 18ஆம்,19ஆம் திகதிகளில் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்க் கல்விச் சேவையினரால் நடாத்தப்பட்ட அனைத்துலக நுண்கலைப்பாட ஆசிரியர்களிற்கான பட்டறையின் போது அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தோற்றுவிக்கப்பட்டது.

அன்று முதல் 25 ஆண்டுகளாக தொடர்ந்தும் புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலையினை வளர்த்தெடுக்கும் அளப்பரிய பணியினை இவ் நிறுவகம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிறுவகத்தின் வெள்ளிவிழா நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். நிகழ்வுகளின் இடையே மாணவர்களின் சிறப்புமிகு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிறுவகத்தின் வெள்ளிவிழா, மதிப்பளிப்பு நிகழ்வுகள் சிறப்புற நடைபெற முழுமையான ஒத்துழைப்புக்களை நல்கிய அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி.
நாகராஜா விஜயகுமார் (சங்கர்)
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *