
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, திருப்பூர் தெற்கு, திருப்பத்துார் மாவட்டம் ஆலங்காயம், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில், தலா,7; காரைக்கால், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் ஆகிய இடங்களில் தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில், வரும், 24 வரை மிதமான மழை தொடரலாம்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.