கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகள் மேம்படுத்தப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

கொழும்பு,

கர்ப்பிணித்  தாய்மார், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட அனைத்து  குழந்தைக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதுடன் உகந்த முறையில் அவர்களுக்கான சுகாதார சேவை விரைவில்  மேம்படுத்தப்படும் என  சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

உலக நோயாளர் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய  இவ்வருட உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு சுகாதார அமைச்சரின் தலைமையில் புதன்கிழமை (17) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. அந்த வகையில் இவ்வருடம்  “பிறக்கும்  குழந்தைகள்  உட்பட  நாட்டில்  இருக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சுகாதார சேவையை வழங்குவது“ என்னும் விசேட தொனிப்பொருளுக்கமைய உலக நோயாளர் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிகழ்வின் போது கலந்துக் கொண்ட சுகாதார அமைச்சர் கருத்து  தெரிவிக்கையில்,

நோயாளர்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவையை பாதுகாப்பான முறையில் வழங்க வேண்டும் என்பதற்காக 2019 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உலக நோயாளர் பாதுகாப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாப்பது சமூகம் என்ற ரீதியில் எம்  அனைவரினதும் கடமையாகும்.

சுகாதார ஊழியர்களின் அர்பணிப்பின் பலனாக தற்போது சிசு மரண வீதம் குறைவடைந்துள்ளதுடன், நோயாளர் பராமரிப்பு சேவையும் உயர் தரத்தில் வழங்கப்படுகின்றது.  சுகாதார சேவையை மாத்திரமல்லாது நோயாளர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் சுகாதார அமைச்சு விசேட  கவனம் செலுத்தியுள்ளது. மேலும் கர்ப்பிணித்  தாய்மார், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட அனைத்து  குழந்தைக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதுடன் உகந்த முறையில் அவர்களுக்கான சுகாதார சேவை மேம்படுத்தப்படும்.

அதற்கமைய அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் தொடர்ச்சியாக பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு  தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் நேரடியாக வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *