‘புளோ’ திரைப்படம் | செல்லப்பிராணியை நேசிப்போருக்கான கலை விருந்து!

இயற்கை சீற்றத்தில் சிக்கி கொண்ட ஒரு கருப்பு பூனை, தன்னுடன் தப்பித்த மற்ற விலங்குகளை எப்படி காப்பாற்றுகிறது என்பதை மையப்படுத்தி வெளியான, ‘புளோ’ என்ற திரைப்படம், செல்லப்பிராணியை நேசிப்போருக்கான கலை விருந்து.

செல்லப்பிராணிகளுடன் மனிதர்கள் நடித்த, நிறைய திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 2024ல், ஆஸ்கர் விருது வென்ற, இந்த ‘புளோ’ திரைப்படத்தில், மனிதர்களுக்கு இடமில்லை. அவர்கள் வாழ்ந்த தடயங்கள் இருக்கின்றன.

ஒரு பேரழிவு சமயத்தில், சுற்றிலும் நீர் சூழ்ந்து இருக்கும் போது, ஒரு படகில் பூனை, சில நாய்கள், கேபிபரா, லெமூர், ஒரு ராட்சசப்பறவை ஆகியோருடன், பயணிப்பது தான், இப்படத்தின் கதை.

தங்கநிற கண்களுடன் கூடிய கருப்பு பூனை, இப்படத்தின் ஹீரோ. தன்னுடன் பயணிக்கும் சக விலங்குகளுக்கு அது இரை தேடி தருவது, பாதுகாப்பாக கரை கடப்பது வரை, விலங்குகளின் நிஜ ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன; எந்த வசனங்களும் இல்லை. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும், பார்வையாளர்களிடம் ஏராளமான விஷயங்களை பேசி செல்வது தான், இப்படம் ஆஸ்கர் வெல்ல, மிக முக்கிய காரணம்.

பொதுவாக பூனைகளுக்கு தண்ணீர் பிடிக்காது. அவை தனிமையை அதிகம் விரும்பும். செல்லப்பிராணியாக வளர்த்தாலும், உரிமையாளருக்கும் தனக்குமான இடைவெளியை, மிக சரியாக உருவாக்கி வைத்திருக்கும். இப்படிப்பட்ட பூனைக்கு, உயிர் பிழைக்க போராடும் களமாக, தண்ணீர் சூழ்ந்த பகுதியே உள்ளது.

இதை காணும் போது, உயிருக்கு போராடும் தருவாயில், எல்லா ஜீவராசிகளும், இப்படித்தானே நடந்து கொள்கின்றன என்ற எண்ணத்தை பார்வையாளர்களிடம் கடத்தி செல்லும். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் இப்படத்தின் இயக்குனர் ஜின்ட்ஸ் கில்பலோடிஸ் அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார்.

விலங்குகளின் உலகை புரிந்து கொள்ள, குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டிய மிக முக்கிய திரைப்படம்.

மேற்கத்திய நாடுகளில், அதுவரை துரதிஷ்டமாக கருதப்பட்ட கருப்பு பூனைகளை, இப்படம் வெளியான பின், பலரும் வாங்கி, தத்தெடுத்தது தான், ‘புளோ’ ஏற்படுத்திய மிக முக்கியமான தாக்கமாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *