“சிறியவராக இருந்தபோது நடந்த பாலியல் குற்றத்திற்கு, பெரியவர் ஆனபிறகும் புகாரளிக்கலாம்.” – உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரை,

 ‘வயதிற்கு வந்த ஒருவர் மைனராக இருந்தபோது தனக்கு நடந்த பாலியல் குற்றங்களுக்காக புகார் அளிப்பதை தடை செய்ய, போக்சோ சட்டத்தில் எந்த விதியும் இல்லை’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தெளிவுபடுத்தியது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர், 17 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக ஆலங்குளம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.

அச்சிறுமியின் தாயிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக, பெண்களை துன்புறுத்தல் தடை சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கு பதிந்தனர்.

நீலகண்டன், ‘சிவில் வழக்கு காரணமாக தன் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டன. இது சட் ட விரோதம். இரு வழக்கு களையும் ரத்து செய்ய வேண்டும்’ என, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு: 2023ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2025ல் போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

தாமதத்திற்கு ஏற்புடைய விளக்கம் இல்லை. புகார்தாரருக்கு வயது 19 என்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் அது குற்றமாகாது. புகார்தாரரை போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவராக கருத முடியாது. இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:


போக்சோ வழக்கில் புகார் அளிப்பதற்கு கால வரம்பு நிர்ணயிக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் குற்றவாளி குடும்ப உறுப்பினர், உறவினர் அல்லது தெரிந்த நபராக இருப்பதால், பெரும்பாலும் குழந்தைகளால் புகாரளிக்க முடியாது.

பாதிக்கப்பட்டவர் வாழ்க்கையின் பிற்பகுதி வரை பாலியல் துஷ்பிரயோகத்தின் அதிர்ச்சியை தொடர்ந்து சுமக்கிறார். அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக, பலர் பெரியவர்களானதும், தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது சந்தித்த துஷ்பிரயோகம் குறித்து புகாரளிக்கின்றனர்.

வயதிற்கு வந்த ஒருவர் மைனராக இருந்தபோது தனக்கு எதிராக நடந்த குற்றங்களுக்காக புகார் அளிப்பதை தடை செய்ய போக்சோ சட்டத்தில் எந்த விதியும் இல்லை.

மனுதாரருக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளன. ​

வழக்கை ரத்து செய்ய விரும்பவில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. புகாரை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. இரு வழக்குகளின் விசாரணை தென்காசி சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப் படுகிறது. இவ்வாறு உத்தர விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *