ஆசிய கோப்பை கிரிக்கெட் ‘சூப்பர் 4’ போட்டியில் வங்கதேசம் கடைசி ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கைக்கு ஏமாற்றத்தை அளித்தது.

துபாய்,

ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆசிய கோப்பை (‘டி-20’) 17வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த ‘சூப்பர்-4’ போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (22), குசால் மெண்டிஸ் (34) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கமில் மிஷாரா (5), குசால் பெரேரா (16) நிலைக்கவில்லை. கேப்டன் சரித் அசலங்கா (21) ஓரளவு கைகொடுத்தார். ஷோரிபுல் இஸ்லாம் வீசிய 18வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட தசுன் ஷனகா, 31 பந்தில் அரைசதம் கடந்தார். கமிந்து மெண்டிஸ் (1), வணிந்து ஹசரங்கா (2) ஏமாற்றினர்.

இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது. தசுன் ஷனகா (64 ரன், 6 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் முஸ்தபிஜுர் 3 விக்கெட் சாய்த்தார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தன்ஜித் ஹசன் (0) ஏமாற்றினார். கேப்டன் லிட்டன் தாஸ் (23) ஓரளவு கைகொடுத்தார். பின் இணைந்த சைப் ஹசன், தவ்ஹித் ஜோடி நம்பிக்கை தந்தது. இருவரும் அரைசதம் விளாசினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்த போது சைப் ஹசன் (61) அவுட்டானார். துஷ்மந்தா சமீரா பந்தில் தவ்ஹித் (58) வெளியேறினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. ஷனகா வீசிய 20வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஜாக்கர் அலி (9), அடுத்த பந்தில் அவுட்டானார். நான்காவது பந்தில் மஹெதி ஹசன் (0) வெளியேறினார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து நசும் அகமது வெற்றியை உறுதி செய்தார்.

வங்கதேச அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷமிம் ஹொசைன் (14), நசுன் அகமது (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது இலங்கை ‘ஆல்-ரவுண்டர்’ துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்கா மாரடைப்பால் காலமானார். போட்டி முடிந்த பின் கொழும்பு சென்ற இவர், தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். நேற்று முன்தினம் இரவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திரும்பிய இவர், நேற்று நடந்த ‘சூப்பர்-4’ போட்டியில் விளையாடினார்.

கடந்த 1999ல் நடந்த உலக கோப்பை தொடரின் போது இந்திய ஜாம்பவான் சச்சினின் தந்தை ரமேஷ் மரணமடைந்தார். உடனடியாக தாயகம் திரும்பிய சச்சின், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். ஓரிரு நாளில் லண்டன் திரும்பிய சச்சின், கென்யாவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார்.

Leave a Reply