வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டு, மின்சார சபை ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது. வர்த்தமானி மூலம் மின்சார சபை ஊழியர்களை அச்சுறுத்த முடியாது. அதற்கு நாங்கள் அச்சப்படப்போவதில்லை என இலங்கை மின்சார சபை சுதந்திர சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் பிரபாத் பிரியன்த தெரிவித்தார்.

மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரம் அத்தியாவசிய சேவை அல்ல என்றே அரசாங்கம் நினைத்துக்கொண்டு இருக்கிறது என்றே நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்.
இது அத்தியாவசிய சேவை என்றால், அரசாங்கம் ஏன் மின்சார சபையை பல துண்டுகளாக பிரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் மின்சாரசபையை தனியார் மயப்படுத்த வழி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்கிறோம். வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டு, மின்சாரசபை ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது.
இலங்கை மின்சார சபையில் இருப்பது, அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்புக்கு அஞ்சி, தொழிற்சங்க போராட்டங்களில் இருந்து பின்வாங்கக்கூடிய தொழிற்சங்கங்கள் அல்ல என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம். அதனால் வர்த்தமானி மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது. அதற்கு நாங்கள் அச்சப்படப்போவதில்லை.
அதேநேரம் 46 வருடங்களுக்கு முன்னர் ஜேஆர். கொண்டுவந்த சட்டத்தை, இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மின்சாரசபை ஊழியர்களை கட்டுப்படுத்த பயன்படுத்தி இருக்கிறார்.தொழிலாளர்களின் வாக்குகளால் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம், இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நாங்கள் நினைக்கவில்லை.
அதேபோன்று இந்த அத்தியாவசிய சேவை சட்டத்தை கடந்த அரசாங்கங்கள் பயன்படுத்தும்போது, இது அடக்குமுறைக்கான சட்டம். தொழிற்சங்க போராட்டங்களை சுருட்டிக்கொள்ளும் சட்டம் என்றே தெரிவித்தார்கள். தற்போது இந்த சட்டத்தை இவர்களும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளர். அத்தியாவசிய சட்டத்தை பயன்படுத்தி, இராணுவத்தை கொண்டுவரவே அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது என்றார்.