நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கொள்ளையடித்து, மின் பிறப்பாக்கிகளுக்கு தீவைத்து, பாடசாலைகளை உடைத்து, நெல் களஞ்சியசாலைகளை தீக்கிரையாக்கி 1980களில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) செய்த மனிதப்படுகொலைகளை பட்டியலிட்டால் அவற்றை வெளிப்படுத்த காலம் போதாது. ஆனால் காலம் வரும் போது நிச்சயம் அவை தொடர்பில் வெளிப்படுத்துவோம். இந்த வன்முறையாளர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு மாற்றமும் இடம்பெறாது என முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் திங்கட்கிழமை (22.09.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எதிர்க்கட்சியிலிருந்து கூறும் விடயங்களை ஆட்சியமைத்த பின்னர் நிறைவேற்ற முடியாது என அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கூறுபவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களின் போது எவ்வாறு மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியும்? நாட்டை தூண்டிவிட்டு, சீரழித்து, அரசியலையும் தவிடுபொடியாக்கி மக்களை முடிந்தவரை ஏமாற்றியிருக்கின்றனர்.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானாலும், ஐக்கிய தேசிய கட்சியானாலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஆட்சியமைத்த பின்னர் நிறைவேற்றியிருக்கின்றோம். ஜே.வி.பி.யைப் போன்று மக்களை ஏமாற்றவில்லை. பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கியது முதல் நாம் நிறைவேற்றிய வாக்குறுதிகள் நீண்ட பட்டியலாகும்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, கடும் எதிர்ப்பினை வெளியிட்டு அதனை இடைநிறுத்தியது ஜே.வி.பி.யாகும். தற்போது மீண்டும் அந்த வேலைத்திட்டத்துக்கு இவர்களாலேயே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இதனால் தற்போது எமக்கு 500 பில்லியன் நஷ்டமாகும். நாம் ஆட்சியமைத்திருந்த கால கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களிலும் நஷ்டம் ஏற்பட்டதற்கான பிரதான காரணம் ஜே.வி.பி. மாத்திரமே.
1980களில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கொள்ளையடித்து, மின் பிறப்பாக்கிகளுக்கு தீவைத்து, பாடசாலைகளை உடைத்து, நெல் களஞ்சியசாலைகளை தீக்கிரையாக்கி, செய்த மனிதப்படுகொலைகளை பட்டியலிட்டால் அவற்றை வெளிப்படுத்த காலம் போதாது.
ஆனால் காலம் வரும் போது நாம் அதனை செய்வோம். அந்த வரலாற்றை மக்களுக்கு நினைவுபடுத்துகின்றோம். இந்த குழுவினரிடமே 64 இலட்சம் மக்கள் மாற்றத்தைக் கோரினர். ஆனால் அந்த மாற்றம் ஒருபோதும் சாத்தியப்படாது என்றார்.