தெற்கு மாகாணத்தில் 22’ம் திகதி மாத்திரம் ஐஸ், ஹெரோய்ன் உள்ளடங்களாக “600 கிலோ போதைப் பொருட்கள்” கைப்பற்றபட்டுள்ளன.

கொழும்பு,

தெற்கு மாகாணத்தில் 22ஆம் திகதி திங்கட்கிழமை மாத்திரம் ஐஸ்,ஹெரோய்ன் உள்ளடங்களாக 600 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளன.இந்த போதைப்பொருள்களுக்கும், தெற்கு மாகாண அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது. போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டும். வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் கடந்த இரண்டு,மூன்று தசாப்தகாலமாக போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பதாள குழு செயற்பாடுகள் ஆகியவற்றுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இடையில் நேரடி தொடர்பு காணப்பட்டுள்ளது.இதுவொன்றும் இரகசியமல்ல.

தெற்கு மாகாணத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 245 ஹெரோய்ன் பெக்கட்டுகள், 635 ஐஸ் போதைப்பொருள் பெக்கட்டுக்கள் உள்ளடங்களாக 600 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தங்காலை சீனிமோதர பகுதியில் உள்ள வீட்டில் இரண்டு பேர் சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்ததை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வீட்டு வளாகத்தில் இருந்த லொறியில் இருந்து 10 கிலோகிராம் ஐஸ்போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் உயிரிழந்தவர்கள் சீனிமோதர பகுதியை சேர்ந்த தினுக லக்ஷான், கவிந்து கல்ஹார என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் உயிரிழந்தவர் வெனுர குமார என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் லொறி ஒன்றில் இருந்து பெருமளவிலான ஐஸ் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளன.அதேபோல் டி 56 துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள.இந்த போதைப்பொருள் தொகை மற்றும் ஆயுதங்களுடன் தொடர்புடையதாக சந்தேக நபர் ஒருவர் தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்துக்கிடமான முறையில் 3 பேர் உயிரிழந்தமை மற்றும் பெருந்தொகையான போதைப்பொருள் தொகை மற்றும் ஆயுதங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டமை தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தெற்கு மாகாணத்தில் நேற்றைய தினம் மாத்திரம் ஐஸ்,ஹெரோய்ன் உள்ளடங்களாக 600 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளன.இந்த போதைப்பொருள்களுக்கும், தெற்கு மாகாண அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது. போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டும்.வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்தவாறு இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள குழு நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தியவர்களில் பிரதானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அவர்களிடம் தற்போது முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பெரும்பாலானவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *