ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் பொருட்களின் விலையை குறைக்காமல், அதன் அடிப்படை விலையை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு மீது அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

அவரது அறிக்கை; ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒலிபரப்பாகி வருகின்றன. ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை.

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது.

எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்சம் விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12% ஜிஎஸ்டி வரி ரூ.75 ஆகும். ஆவின் நெய் மீதான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.31 மட்டும் தான். அதன்படி ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.656க்கும் மட்டுமே விற்கப்பட வேண்டும். அமுல் , நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில் தான் விலைக்குறைப்பு செய்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூ.625லிருந்து ரூ.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூ.31 ஜிஎஸ்டி விலை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூ.700 நிர்ணயித்துள்ளது.

அதே நேரத்தில் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாளில் விலையை குறைத்ததாகக் கணக்கு காட்டும் நோக்குடன் இன்று முதல் நவம்பர் 30 வரை ஒரு கிலோ நெய்க்கு ரூ.40 தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடியும் கூட ஆவின் நெய், பனீர் ஆகியவற்றுக்கு குறைந்த அளவில் தரப்படுகிறதே தவிர, பிற பால் பொருள்களுக்கு தரப்படவில்லை. அவை அதிக விலைக்குத் தான் விற்பனை செய்யப்படுகின்றன.


நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் நிலையில், டிசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பனீர் ஆகியவற்றின் விலை மீண்டும் உயர்த்தப்படும். திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும். இதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அவர்களுக்குத் தான் தோல்வி கிடைக்கும். வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *