கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலிருந்து 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருள் பொதியுடன் “கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (23) காலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் வசிக்கும் 29 வயதுடைய பெண்ணொருவரும், இந்தியாவின் சென்னையில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்தப் பொதியை தாய்லாந்து – பெங்கொக்கில் வாங்கி, இந்தியாவின் புது டெல்லிக்கு கொண்டுசென்று, அங்கிருந்து இன்று காலை 6.50 மணிக்கு ஏர் இந்தியா விமானம் AI-277 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 5 பொதிகளில் 5 கிலோகிராம் 92 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.