தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ – தொடங்கொட வரையான வீதியைப் புனரமைப்பதற்கு 1.4 பில்லியன் நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ தொடக்கம் தொடங்கொட வரையான வீதி 2011 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனப் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதுடன், இதுவரைக்கும் எவ்வித பிரதான புனரமைப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 0 கிலோமீற்றர் தொடக்கம் 19 கிலோமீற்றர் வரையான அதிவேக நெடுஞ்சாலையின் பகுதி மற்றும், 19 கிலோமீற்றர் தொடக்கம் 34 கிலோமீற்றர் வரையான அதிவேக நெடுஞ்சாலைப் பகுதி, பக்கேஜ் இரண்டின் (02) கீழ் துரிதமாகப் புனரமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 19 கிலோமீற்றர்கள் 04 பாதைகளுடன் கூடிய அதிவேக நெடுஞ்சாலை வீதியை உள்ளடக்கியதாக 0 கிலோமீற்றர் தொடக்கம் 19 கிலோமீற்றர் வரை பழுதடைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையின் பகுதியை இரண்டாம் பக்கேஜ் இன்கீழ் புனரமைப்புச் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதற்காக, உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களிடம் தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறைமையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 05 விலைமுறிகள் சமர்ப்பிக்கபட்டுள்ளன. விலைமுறிகள் மதிப்பீட்டுக்குழு மற்றும் உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை 1,490.96 மில்லியன் ரூபாய்க்கு கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான எம்.எஸ். எக்செஸ் டபிள்யு.கே.கே. குழுமத்திற்கு வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
