இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி (Admiral Dinesh K Tripathi), இலங்கைக்கு மேற்கொண்ட நல்லெண்ண விஜயத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்திற்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23, 2025) விஜயம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஆலயத்திற்கு சென்ற இந்திய கடற்படைத் தளபதியை ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக வரவேற்றனர். அங்கு நடைபெற்ற விசேட பூஜைகளில் அவர் கலந்துகொண்டார்.
ஆன்மீக ரீதியான இந்த விஜயத்தின்போது, ஆலய நிர்வாகத்தால் அட்மிரல் தினேஷ் கே திரிபாதிக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த விஜயம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 2025 செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.