இந்த ஆண்டு இதுவரை ஈரான் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

டெஹ்ரான்,

இது தொடர்பாக நார்வேயை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பானது, கடந்த வாரத்தில் மட்டும் 64 பேர் தூக்கில் போடப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் பெரியளவில் கொலை இயக்கத்தை ஈரான் நடத்தி வருகிறது. வெளிநாடுகள் கண்டனம் இல்லாத நிலையில், தூக்கு தண்டனைகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 975 பேர் தூக்கில் போடப்பட்டனர். இந்தாண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே ஏராளமானோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.

ஈரானில் இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்ட பிறகு 1980 களிலும் மற்றும் ஈரான் – ஈராக் போர் நடந்த 1990 காலகட்டத்திலும் ஏராளமானோருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிறகு தற்போது தான் மீண்டும் தூக்கு தண்டனை அதிகளவில் நிறைவேற்றப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரான் மதத் தலைவர் அயோதுல்லா அலி காமேனிக்கு எதிராக 2022 – 2023 ல் நடந்த போராட்டத்துக்கு பிறகு கடந்த 3 தசாப்தங்களில் தற்போது தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் ஈரான் தீவிரம் காட்டி வருகிறது என மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

ஈரானில் தற்போது தூக்கு மூலமே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. முன்னர் வேறு முறைகள் பின்பற்றப்பட்டாலும் தற்போது அது நடைமுறையில் இல்லை. மேலும் பெரும்பாலான தூக்கு தண்டனைகள், சிறைச்சாலைகளிலேயே நிறைவேற்றப்படுகிறது. அரிதாக சில தூக்கு தண்டனைகள் மட்டும் பொது வெளியில் நிறைவேற்றப்படுகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் தான் அதிகளவு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக, ஆம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *