கோவை மாநகராட்சி பகுதிகளில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில், 100 இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை,

கோவை மாநகராட்சி பகுதிகளில், சிறிது நேரம் மழை பெய்தாலே ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வாகன ஓட்டிகளை திணறடிக்கிறது. குறிப்பாக, சாக்கடையில் கலந்து கழிவு நீராக பயனற்றதாக மாறி வருகிறது.

குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அரசு கட்டடங்கள் என அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவற்றை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்காததாலும், முறையாக பராமரிக்காததாலும் பெரும்பாலான கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு பயனற்றுள்ளது.

பருவநிலை மாற்றத்தால் மழை, வெயில் தாக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக, குறுகிய காலத்தில் அதிக மழை கொட்டித்தீர்ப்பதையும் காண முடிகிறது. நீர்த்தேக்க வசதி இல்லாததால், இவை வீணாக குளம், ஆறு வழியாக கடலில் கலந்து வருகிறது.

மழைநீரை வீணாக்காமல் நிலத்தடிக்குள் செலுத்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக, நீரியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீரை சேமிக்க, 100 இடங்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இத்தொழில்நுட்பத்தின்படி, தண்ணீர் தேங்கும் இடங்களில், 3 மீ., ஆழத்துக்கு தோண்டி, முதலில் ஜல்லி, பின் ‘இக்கோ பிளாக்’ வைக்க வேண்டும். இவற்றை, 10 மீ., ஆழத்தில் குழாய் வாயிலாக மண்ணுடன் இணைக்கும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

‘ஸ்பான்ஞ்’ போன்ற இந்த அமைப்பு வாயிலாக, மழைநீர் வடிகட்டப்பட்டு கீழே சென்று நீர் மட்டம் அதிகரிக்க வழிவகை செய்கிறது. ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டாரத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதால், தண்ணீர் தேங்குவது பெருமளவு தவிர்க்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில்,”மாநகராட்சி பகுதிகளில், 100 இடங்களில் ரூ.160 கோடியில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்க உள்ளோம். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் நிதி கோரியுள்ளோம். நிதி ஒதுக்கியதும் பணிகள் துவக்கப்படும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *