✧. முன்னுரை: 730 நாட்கள் கடந்தும் தீர்வற்று நிற்கும் வாழ்வாதாரப் போராட்டம்
மயிலத்தமடு மற்றும் மாதவணை பகுதிகளில் உள்ள பாரம்பரிய கால்நடைப் பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் நில உரிமைக்காக நடத்தும் போராட்டம் கடந்த 730 நாட்களாக தொடர்ந்து வருகின்றது. செப்டம்பர் 15, 2025 அன்று சித்தாண்டி போராட்ட பந்தலடியில் இந்த மைல்கல் எட்டப்பட்ட போதும், அதிகாரபூர்வமான தீர்வு கிடைக்கவில்லை.

இந்த போராட்டம் வெறும் சமூக வாழ்வாதாரப் பிரச்சனை அல்ல; நில உரிமை, சுற்றுச்சூழல் சமநிலை, பாரம்பரிய கால்நடை இனங்கள், புல்லிணங்கள், சமூக அடையாளம் மற்றும் நாட்டின் எதிர்கால நல்லிணக்கத்திற்கான கேள்விகளை எழுப்புகிறது.
✦. மகாவலி அபிவிருத்தி (அழிவு விருத்தி) திட்டத்தின் பின்விளைவுகள்
➊. நிர்வாக மற்றும் அரசியல் ரீதியான சதி (திட்டமிட்ட ஆக்கிரமிப்பு)
● மகாவலி திணைக்களத்தின் பங்கு மற்றும் நோக்கங்கள்:
பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களை ‘அபிவிருத்தி’ என்ற பெயரில் திட்டத்திற்கு உட்படுத்துவது, வெளிப்படையாக தெரியாத நீண்டகால இலக்குகளை உடையதாகும்.
○இனப் பரம்பல் மாற்றம்: திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மாவட்டத்தின் இனத் பரம்பலை மாற்றுவதற்கான முயற்சி.
○ அரசியல் பிரதிநிதித்துவக் குறைப்பு: இன மாற்றம் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் அதிகாரம் சீரழிக்கப்படுதல்.
○ நிர்வாக அதிகாரங்கள் அகற்றப்படல்: மகாவலி திணைக்களத்தின் அதிகார எல்லையில் நிலங்கள் வருவதால், பாரம்பரியமாக நிர்வகித்த மாவட்ட மற்றும் மாகாண அதிகாரங்களின் அதிகாரம் குறைக்கப்படுதல்.
● உள்ளூர் அதிகாரிகளின் கையறு நிலை: அரசியல் அழுத்தங்களால் நீண்டகால ஆபத்துக்களை தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை.
➋. சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய அழிவு
● நில உரிமை மீறல் மற்றும் உயிர் வாழும் உரிமை சீரழிவு:
நிலங்களை ஆக்கிரமிப்பதால், பண்ணையாளர்களின் உரிமைகள் மீறப்படுவதோடு, நாட்டின் பாரம்பரிய கால்நடைகள் மற்றும் பல உயிரினங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
● பாரம்பரிய கால்நடை இனத்தின் அழிவு:
மேய்ச்சல் நில அழிப்பதால் நாட்டினக் கால்நடைகள் தங்கள் அத்தியாவசிய உணவை இழக்க, இன அழிவுக்குள்ளாகின்றன. இது வெறும் கால்நடை இழப்பு அல்ல; பாரம்பரிய கலாச்சார அடையாளத்தின் அழிவாகும்.
● இயற்கை வளச் சீரழிவு:
செயற்கையான புல்லிணங்களை நடவு செய்வதால் இயற்கையாக வளரக்கூடிய புல்லிணங்கள் அழிக்கப்படுகின்றன. இது சுற்றுச்சூழல் சமநிலைக்கும் விவசாயத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.
● போசாக்குக் குறைபாடு:
பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுவதால், புரத உணவுக்கான தேவை அதிகரிக்கிறது, ஆனால் நாட்டுப்புற ஆதாரம் இல்லாமல் போய் போசாக்குக் குறைபாடு ஏற்படுகிறது.
➌. போராட்ட வீரியத்தின் மடைமாற்றம்
● உண்மையான சவாலை திசை திருப்புதல்:
போராட்டக் களத்தின் வீரியத்தை குறைத்து, உண்மையான சிவில் சமூக ஊடாட்டத்தை தவிர்த்து, ஏமாற்றுப் பேர்வளங்கள் செயல்படுகின்றன.
● அரசின் கைக்கூலிகள்:
சிலர் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை இனவாதிகளாகக் குறிக்கின்றனர். இதனால் போராட்ட இலக்கு சிதைக்கப்படுகிறது.
✦. நிலைநிறுத்தப்பட வேண்டிய தீர்வுகள்
● ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துதல்:
பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமிப்பதை அல்லது சிதைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
● நிரந்தர மேய்ச்சல் தரைப் பிரகடனம்:
பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களை நிரந்தரமாக (Gazetted) பிரகடனம் செய்து, மகாவலி திணைக்களத்தின் அதிகார எல்லையிலிருந்து நீக்க வேண்டும்.
● பொறுப்புக்கூறல்:
மாவட்டத் துறை சார்ந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் மடைமாற்றுவோர் அடையாளம் கண்டும், பொறுப்புக்கூற வேண்டும்.
● சமூக ஒருமைப்பாடு:
உண்மையான சிவில் சமூக உதவியுடன் போராட்டத்தை அதன் மூல இலக்கை நோக்கி தொடர வேண்டும்.
“நாம் விட்டுச் செல்லும் வளங்களும் அடையாளங்களுமே எமது எதிர்கால சந்ததியினருக்கு உறுதுணையாக அமையும்.”
✦.முடிவுரை:
மயிலத்தமடு–மாதவணைப் பண்ணையாளர்கள் போராட்டம் சமூக உறுதியையும், பாரம்பரியத்தை பாதுகாப்பின் அவசியத்தையும் காட்டுகிறது.
போராட்டத்தை மடைமாற்றும் முயற்சிகள் மற்றும் அரசின் மறைமுகச் செயற்பாடுகள் இந்த பிரச்சனையை அரசியல் சதி எனும் நிலைக்கு உயர்த்தியுள்ளன.
வரலாற்றுத் தவறைத் தடுப்பது, உண்மையான சிவில் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதே ஒரே வழி. இல்லையெனில், எதிர்கால சந்ததியினரிடம் நாம் பொறுப்புக்கூற வேண்டிய நிலை உருவாகும்.

எழுதியவர்: ஈழத்துத் நிலவன்
தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ ஆய்வாளர்
01/10/2025