தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘ சாலையில் நடந்து சென்றாலே தடியடி… சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாக கூடி அதிகாரத்துக்கு எதிரான புரட்சியை உருவாக்கி காட்டினார்களோ அதேபோல் இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். இவ்வாறு அந்த பதிவில் கூறியிருந்தார்.இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, ‘ இந்தக் கருத்து பொறுப்பற்றது. வன்முறையை தூண்டும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளதாக’ தெரிவித்து இருந்தார். பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்தப்பதிவை ஆதவ் அர்ஜூனா நீக்கிவிட்டார்.

இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

192 கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பாடு

196(1) வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்க்கும் அல்லது நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்கள்

197 (1) (D) இந்திய இறையாண்மை, ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல்,

353(1)(b) பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள் தவறான தகவல்கள் அல்லது வதந்திகளை வெளியிடுவது

353(2) பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவலை வெளியிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *