சம்பத் மனம்பேரி “நடராஜா ரவிராஜ் படுகொலை” விவகாரத்தில் சந்தேக நபரல்ல, அவர் சாட்சியாளர். – சாகர காரியவசம்.

கொழும்பு

போதைப்பொருள் விவகாரத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்ல, அவர் சாட்சியாளர், அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

எமது கட்சி சார்பில் பல்லயிரக்கணக்கானோர் தேர்தலில் முன்னிலையானார்கள். இவற்றில் குற்றவாளிகளும், சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும் இருக்க முடியும்.அனைவரின் பின்னணியும் எமக்குத் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.

தனியார் தொலைக்காட்சியுடன் நடைபெற்ற நேர்காணலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கேள்வி
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொகை கணக்கில் அகப்படும் ஐஸ்போதைப்பொருள் உற்பத்திக்கான மூலப்பொருள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.பாதாள குழுக்களுடன் இவர் நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளமை நீதிமன்ற அறிக்கையிடலுடன் தற்போது வெளிப்படுகிறது.

இந்த நபர் பொதுஜன பெரமுனவுடன் நீண்டகாலமாக ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளார்.உண்மை வெளிப்பட்டவுடன் அவரை கட்சியில் இருந்து நீக்கினீர்கள்,அதை தவிர்த்து வேறொன்றும் செய்யவில்லை. இவ்விடயம் தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்
மனிதர்களை நீராட்டி கட்சிக்குள் எடுக்க முடியாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இவர்களின் பின்னணி எமக்கு தெரியாது.

கேள்வி
ஒருவரின் பின்னணியை ஆராயாமல் கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா, அவர்களுக்கு வேட்புமனு வழங்குவீர்களா ?

பதில்
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எமது கட்சி சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையானார்கள். இவற்றில் குற்றவாளிகளும், சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும் இருக்க முடியும்.

கேள்வி
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபர் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.பொலிஸ் ஊடக அலுவலகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விடயம் பற்றி என்ன குறிப்பிடுகின்றீர்கள் ?

பதில்
சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்ல, அவர் சாட்சியாளர்.அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. இதனை நான் ஆராய்ந்து பார்த்தேன்.

கேள்வி
அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டதன் பின்னரா தேடிப்பார்த்தீர்கள்?

பதில்
இல்லை, ஊடகங்களில் இவ்விடயம் வெளியானதன் பின்னரே ஆராந்துப்பார்த்தேன்.கட்சியின் வேட்புமனு வழங்கும் போது சகல உறுப்பினர்களும் சத்திய கடதாசி வழங்கினார்கள்.அதில் இவர் இந்த விடயம் பற்றி ஏதும் குறிப்பிட்டிருக்கவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *