தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொல்காப்பியம் பூங்காவை ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், 42.45 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள தொல்காப்பிய பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில், 42.45 கோடி ரூபாய் செலவில் தொல்காப்பிய பூங்கா மேம்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த, 2008ல், 58 ஏக்கர் பரப்பில், அன்றைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2011 ஜனவரி 21ல் அவரால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த காலத்தில் முறையான பராமரிப்பின்றி இருந்த தொல்காப்பிய பூங்கா, இப்போது சீரமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியால் தொல்காப்பிய பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைக்கப்பட்டு, சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக மூன்று வழி பெட்டக கால்வாய் அமைக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

தொல்காப்பிய பூங்கா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை, 1,446 பள்ளிகளைச் சேர்ந்த, 1,12,826 மாணவர்கள் மற்றும் 6,070 ஆசிரியர்கள், இப்பூங்காவில் நடத்தப்பட்டு வரும் சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் பங்கு பெற்று பயனடைந்துஉள்ளனர்.

தொல்காப்பிய பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை நேற்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், கொன்றை மரக்கன்றை நட்டு வைத்தார்.

பூங்காவை விரைவில் மக்களின் முழு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, எம்.எல்.ஏ.,க்கள் எழிலன், வேலு, ராஜேந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், சென்னை குடிநீர் மேலாண்மை இயக்குனர் வினய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *