தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தலும் 28.09.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -, ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் பொறுப்பாளர் திரு.மாறன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
பிரெஞ்சு தேசத்தின் தேசியக்கொடியை ஆர்ஜொந்தை முன்னாள் நகர பிதா அவர்கள் ஏற்றிவைக்க,
தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அரசியல் பிரிவு துணைப் பொறுப்பாளர் செல்வி அச்சுதாயினி பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடர் ஏற்றல், மலர்வணக்கம் மற்றும் மலர்மாலை அணிவித்தல் ஆகியவற்றை மாவீரர் குடும்ப உறவுகள் செய்ததைக் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் உணர்வோடு அணிவகுத்து சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழ்ச் சோலைப் பள்ளி மாணவர்களின் எழுச்சி நடனங்கள், கவிதைகள், தமிழ் இளையோர் அமைப்பினரின் உரை, ஆர்ஜொந்தை துணை நகரபிதாவின் உரை, தமிழர் கலை பண்பாட்டுக் கழக கலைஞர்களின் எழுச்சி கானங்கள் என்பன சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் குறித்த மாவீரர்கள் தொடர்பில் பல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்த பின்னர். தமிழீழத் தேசியக்கொடி மற்றும் பிரெஞ்சுத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது..














