இலங்கையில் மது அருந்துவதால் தினமும் சுமார் 50 பேர் அகால மரணம் அடைகிறார்கள்

கொழும்பு

நாட்டில் பதிவாகும் 83 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மதுபாவனையால் தினமும் சுமார் 50 பேர் அகால மரணமடைகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மதுசார தடுப்பு தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 3) மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.

உலகளாவிய ரீதியில் வருடாந்தம் மதுபாவனையால் சுமார் 3 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். பதிவாகும் 10 மரணங்களில் 8 மரணங்களுக்கு தொற்றா நோய்களே பிரதானக் காரணமாக உள்ளது. தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு மதுபாவனையும் முக்கிய காரணியாக உள்ளது. அந்தவகையில் நாட்டில் பதிவாகும் 83 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மதுபாவனையால் தினமும் சுமார் 50 பேர் அகால மரணமடைகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இருதய நோய் மற்றும் புற்றுநோய் ஆகியன சமூகத்தில் அதிகரிப்பதற்கு மதுபாவனையே முதன்மை காரணியாக உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகையால் நாளாந்தம் இழந்து வரும் வாடிக்கையாளர்களை ஈடு செய்வதற்காக மதுசார நிறுவனங்கள் சிறுவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. நாட்டில் உள்ள 21 சதவீதமானோர் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.

ஆகையால் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப கலால் வரியை அதிகரிக்கும் ஒரு அறிவியல் வரிச்சுட்டெண்ணை அறிமுகப்படுத்தி அதை செயற்படுத்த வேண்டும். தற்காலிக மதுபான சாலைகளுக்கு மற்றும் சுற்றுலாத்துறை என்ற போர்வையில் ஆரம்பிக்கப்படும் மதுபான சாலைகளுக்கு உரிமங்களை வழங்கு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவது அவசியம்.

நாட்டிற்கு ஏற்படக்கூடிய செலவுகளையும் , பொதுமக்களின் நல் வாழ்வை கருதியும் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் கலால் வரியை அதிகரித்தது எதிர்கால சந்ததியினர் மதுபாவகைக்கு ஆளாகும் வீதத்தை குறைத்து இதனால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தடுப்பதற்கு ஏற்ற திட்டமொன்றை அரசாங்கம் விரைவில் வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *