உக்ரைனில் பயணியர் ரயில் மீது, ரஷ்ய ராணுவம் ‘ட்ரோன்’ தாக்குதல் நடத்தியதில், 30 பேர் பலியாகினர்.

கீவ்

கிழக்கு ஐரோப்பிய நாடா ன உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையத்தை குறிவைத்து ரஷ்ய ராணுவம், ‘ட்ரோன்’ தாக்குதல் நடத்தியது.

கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த பயணியர் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 30 பேர் உயிரிழந்தனர்.

உடனடியாக அங்கு மீட்புப்படையினரும், டாக்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் இந்த செயலை காட்டுமிராண்டித்தனம் என விமர்சித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்பதை அறிந்தும் தாக்குதல் நடத்துவது பயங்கரவாதம். உலகம் இதைப் புறக்கணிக்கக்கூடாது,” என்று கூறினார்.

ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனின் மின் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு, 50,000 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் நெருங்கும்போது, உக்ரைனின் மின் கட்டமைப்பை ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன.

அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக வடக்கு நகரமான செர்னிஹிவ் அருகே மின் கட்டமைப்புகளை குறிவைத்து, 109 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.

இரவு நேரத்தில் நடந்த ரஷ்ய தாக்குதலால் பல இடங்களில் தீப்பிடித்து, மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *