ரூ.100 கோடி நிலக்கரி மாயமான விவகாரம் விசாரணையை மூடி மறைக்கும் தமிழக மின் வாரியம்

சென்னை

வடசென்னை, துாத்துக்குடி அனல் மின் நிலையங்களில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி மாயமான விவகாரத்தில் விசாரணை நடத்திய மின் வாரியம், நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்கிறது. இது, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காப்பற்றும் முயற்சியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வடசென்னை, சேலத்தில் மேட்டூர் மற்றும் துாத்துக்குடியில், மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் மின் உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் நிலக்கரி, ஒடிசா மாநில சுரங்கங்களில் இருந்து எடுத்து வரப்படுகிறது.

கடந்த, 2021 மார்ச் நிலவரப்படி, வடசென்னை மின் நிலையத்தில், கொள்முதல் செய்ததை விட, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பு குறைவாக இருந்தது. இதேபோல், துாத்துக்குடி மின் நிலையத்தில், 72,000 டன் நிலக்கரி இருப்பு குறைவாக இருந்தது.

இவற்றின் மதிப்பு, 100 கோடி ரூபாய். இதை, அந்தாண்டு ஆகஸ்டில், அப்போதைய மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தெரிவித்தார். அவரும், மின் வாரிய உயரதிகாரிகளும் இரு அனல் மின் நிலையங்களுக்கும் சென்று, நிலக்கரி மாயமானதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குநர் தலைமையில் விசாரணை குழு அமைக்க, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்தப்பட்டது. அதில், நிலக்கரி மாயமானது உறுதி செய்யப்பட்டு, அறிக்கையும் சமர்ப்பிக்கப்பிட்டது. நான்கு ஆண்டுகளாகியும் விசாரணை அறிக்கையை, மின் வாரியம் வெளியிடாமல் உள்ளது. இது முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காப்பாற்றும் முயற்சியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய பணியாளர்கள் கூறியதாவது: விசாரணை அறிக்கை வெளியானால் தான், தவறு செய்தவர்கள் யார் என்பது தெரியவரும்.

அவர்களிடம் இருந்து இழப்பீட்டு தொகை வசூலிப்பதுடன், சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்க முடியும். இல்லையேல், நிலக்கரி மாயமானதாக கூறப்படும் புகாரில் உண்மை இல்லை என்று கூறவும் வாய்ப்புள்ளது. இனியும் காலதாமதம் செய்யாமல், நிலக்கரி மாயமான விவகாரம் தொடர்பான விசாரணை முடிவை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *