இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம்

ஜெனிவா

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் மீது, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பரபரப்பான பின்னணியில், அரசாங்கம் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் ஆகியோர் தலைமையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழு, அமெரிக்கா, நோர்வே உள்ளிட்ட முக்கிய மேற்குலக நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒத்துழைப்புக் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கையின் நிலை குறித்து ஆராயும் விதமாக, அக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்ற பின்னணியில் அமெரிக்கா, நோர்வே உள்ளிட்ட முக்கிய மேற்குலக நாடுகளிடம் அரசாங்கம் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் ஆகியோர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு, ஜெனிவா விவகாரத்தில் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 20 நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த இராஜதந்திர நகர்வை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

குறிப்பாக இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நாடான நோர்வே நாட்டுப் பிரதிநிதிகளுடன் சுமார் ஒரு மணித்தியாலம் வரை கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உள்ளிட்ட இலங்கையின் இராஜதந்திரிகள் பங்கேற்றிருந்தனர்.

புதிய தீர்மானத்தின் மூலமாக முன்வைக்கப்பட்ட பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு போன்ற விடயங்களில் அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்தது.

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை எதிர்கொண்டு, தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அநுரவின் தூதுக்குழு நோர்வேயிடம் முக்கிய வாக்குறுதிகளையும் உத்தரவாதங்களையும் அளித்துள்ளது. அதாவது, தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு சட்டம், பாதாள உலகக் குழுக்களைக் கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், இந்தச் சட்டத்தை கூடிய விரைவில் இரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அரசாங்கம் உறுதியளித்தது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. காணாமலாக்கப்பட்டோர் குழுவின் 29 ஆவது அமர்வில் தெளிவுபடுத்தியிருந்தார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டுச் சட்டம், உள்நாட்டில் அமுல்படுத்தப்பட்டு, இந்தச் செயலை முற்றிலுமாக தடைசெய்துள்ளதாக குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அங்கீகாரமும் மரியாதையும் தேவை என வலியுறுத்தியதுடன், நீண்ட கால ஆதரவு, நியாயமான நிதி இழப்பீடு, தொழில் கல்வி மற்றும் சமூகப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்கும் புதிய இழப்பீட்டு அமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் பணியாற்றி வருவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார உறுதியளித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு வரும் 8 ஆம் திகதி புதன்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான முடிவுகள் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *