தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் எமது நாட்டின் இறைமையில் உள்ள கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் அவர்கள் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமூகம் மிக விரைவில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்குமென வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடாக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (04.10.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சதீவை மீட்பேன் என வடக்கு கடற்றொழில் சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தை தொடர்ச்சியாக அரசியல் மேடைகளில் பேசி வருகின்றார்.
முதலமைச்சரே, நல்லெண்ண அடிப்படையில் வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த 2023ஆம் ஆண்டு மூன்று மகஜர்களை உங்களுக்கு அனுப்பியது. அதற்கு நீங்கள் எதுவித பதிலும் வழங்கவில்லை. ஆனால் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை தூக்கி வைத்து வடக்கு கடற்றொழிலாளர்களை பகைக்கின்ற ஒரு விடயத்தை நீங்கள் செய்கின்றீர்கள்.
கச்சதீவினால் தான் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுவதாக உங்களது அரசியல் இருப்புக்காக பொய்யான ஒரு குற்றச்சாட்டை தமிழ்நாட்டிலே நீங்கள் பேசாதீர்கள்.
வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டு அரசுக்கோ எதிரான எந்த ஒரு போராட்டத்தையும் பாரிய அளவில் முன்னெடுக்கவில்லை.
தொடர்ச்சியாக இவ்வாறு பேசி தமிழ்நாட்டு மீனவர்களை வடக்கு மீனவர்களுக்கு எதிராக தூண்டுவீர்களாக இருந்தால் வடக்கு கடற்றொழில் சமூகமாகிய நாங்கள் பாரிய ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம்.
அதுபோல தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை பேசுகின்றார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முதலே, இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சனையை சமூகமாக தீர்ப்பதற்கு முன் வாருங்கள் என்று விஜய்க்கும், சீமானுக்கும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் நீங்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
கச்சதீவு விவகாரத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டதாக ஒருபோதும் வரலாறு இல்லை. உலகத்திலேயே தடை செய்யப்பட்ட, கடல்வளத்தை கருவறுக்கின்ற இரட்டை இழுவைமடி தொழிலைத்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் செய்கின்றனர்.
நீங்கள் இந்த இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு மாற்றுமுறை தொழிலை செய்யுங்கள். இதன்போது உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுக்கின்றோம்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. இலங்கையின் சட்டத்தின்படி, எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது வடக்கு கடற்றில் சமூகத்தின் தெளிவான நிலைப்பாடாகும். இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் தொழில் செய்வது குறித்து சிந்திப்பதற்கு கடற்றொழில் சமூகம் தயாராக இருக்கின்றது.
இந்திய அரசாங்கம் இந்த விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என்பது எமது விருப்பம். அதைவிடுத்து வடக்கு மாகாண மக்களுக்கு சொந்தமான கச்சதீவு குறித்து அரசியல் மேடைகளில் பேசி மீனவர்களை தூண்டி விடுவது கண்டிக்கத்தக்கது. அதன் விளைவுகள் எதிர்காலத்தில் பாரதூரமாக இருக்கும் என்றார்.