மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.

கொல்கத்தா

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப்பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

டார்ஜிலிங் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி, இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டார்ஜிலிங் மாவட்டத்தில் மிரிக் என்ற இடத்தில் கனமழை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மலைப்பகுதி மாவட்டங்களில் இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் மழையால், அண்டை மாவட்டமான ஜல்பைகுரியின் மல்பஜாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததாகவும், பன்குராவில் அதிகபட்சமாக 65.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக, பாலம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *